Published : 27 Nov 2014 04:21 PM
Last Updated : 27 Nov 2014 04:21 PM
பவுன்சர் பந்தில் அடிபட்டு இத்தகைய தீவிர காயம் ஏற்படுவது அரிதிலும் அரிது என்று பிலிப் ஹியூசிற்கு அறுவை சிகிச்சை செய்த செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர் டோனி கிராப்ஸ் தெரிவித்துள்ளார்.
பவுன்சர் பந்து நேராக அவரது முதுகெலும்பு தமனியில் சேதங்களை ஏற்படுத்தியது. மூளையுடன் தொடர்புடைய மிக முக்கிய தமனிகளில் இதுவும் ஒன்று. அடிபட்டவுடன் இந்த தமனி முறிந்தது. இதனால் கடுமையாக குருதிப்போக்கு ஏற்பட்டது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணம் என்றார். அவர்.
இது குறித்து டோனி கிராப்ஸ் கூறுவதாவது:
முதுகுத் தண்டையும், மூளையையும் பாதுகாக்கும் subarachnoid சவ்வுகளில் குருதிப்போக்கு ஏற்பட்டு பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார். இது மிகவும் அரிதாக நிகழ்வதே.
மொத்தமாகவே இதுவரை இது போன்ற நிலை 100 பேர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கிரிக்கெட் பந்தில் அடிபட்டு இப்படி நிகழ்வது ஒரேஒரு முறை ஏற்பட்டுள்ளது.
பிலிப் ஹியூஸ் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் சி.ஏ.டி. ஸ்கேன் எடுத்து மேற்கொண்டு சிகிச்சையைத் திட்டமிட்டோம்.
அடிபட்டதால் மூளையின் அந்தப் பகுதியில் அழுத்தத்தைக் குறைக்க சிகிச்சை அளிக்க முடிவெடுத்தோம். அதன் பிறகு மண்டை ஒட்டின் சில பகுதிகளை அகற்றி மூளை விரிவடைய வழிவகை செய்தோம், ஏனெனில் மூளை ரத்தக்கட்டினால் சுருங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.
அறுவை சிகிச்சை சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவரை மாற்றினோம்.
இவ்வகை விஷயங்களில் எங்களது அணுகுமுறை என்னவெனில் அவரை கோமாவில் ஆழ்த்துவது. ஏனெனில் மூளைக்கு ஓய்வு அளிக்கப்படவேண்டும். ஆனால் அதே சமயத்தில் உடலின் மற்ற செயல்பாடுகளை கண்காணித்து வந்தோம்.
24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காத்திருந்தோம், எங்களால் முடிந்தவற்றைச் செய்து பார்த்தோம், ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடைசியாக அவர் உயிர் பிரிந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT