Published : 07 Jan 2014 01:12 PM
Last Updated : 07 Jan 2014 01:12 PM
வழக்கமாக ஓராண்டு இடைவெளியில் நடக்கும் ஆஷஸ் தொடர் 2013 – 14இல் ஓராண்டுக்குள்ளாகவே இரண்டு முறை நடந்தது. கடந்த முறை ஆஷஸ் தொடரைப் பறிகொடுத்த ஆஸ்திரேலியா இந்த முறை மீண்டும் தோல்வியையே தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது. ஆஷஸ் தொடர் தொடங்கும் முன் மைக்கேல் ஆர்தருக்குப் பதில் டெரன் லீமான் ஆஸி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பலரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆஸி அணி முதல் ஆஷஸ் தொடரில் 0-3 என்னும் கணக்கில் தோற்றது.
ஆண்டு இறுதியில் தொடங்கிய அடுத்த ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் களம் இறங்கியது. முதல் இன்னிங்ஸில் 300 ரன்னுக்குள் ஆஸியைச் சுருட்டியது. ஆனால் மிட்செல் ஜான்சனின் பொறி பறக்கும் பந்து வீச்சு இங்கிலாந்தைத் திணறவைத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மைக்கேல் கிளார்க்கும் டேவிட் வார்னரும் சதம் அடிக்க, நான்காவது இன்னிங்ஸில் மீண்டும் ஜான்சனின் பந்து ஆதிக்கம் செலுத்த, போட்டி ஆஸியின் வசமாயிற்று. 381 ரன் வித்தியாசத்தில் ஆஸி வென்றது. தொடருக்கான பொருத்தமான முன்னோட்டமாக இந்த டெஸ்ட் அமைந்தது.
இந்த டெஸ்டில் 9 விக்கெட்கள் வீழ்த்திய ஜான்சன் இங்கிலாந்து ஆட்டக்காரர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஐந்து டெஸ்ட்களிலும் அற்புதமாகப் பந்து வீசி, நெருக்கடியான தருணத்தில் மட்டை வீச்சிலும் தன் பங்களிப்பைச் செலுத்திய ஜான்சன் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எடுத்த விக்கெட்கள் 37. ஒரு விக்கெட்டுக்கு அவர் கொடுத்த ரன்களின் சராசரி 14. விக்கெட்கள் ஒரு புறம் இருக்க, ஜான்சனைப் பார்த்தாலே இங்கிலாந்து வீரர்கள் அலறும் அளவுக்கு அவரது பந்து வீச்சில் உக்கிரம் தெரிந்தது.
ஆஸியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஜான்சன் என்றாலும் பால் ஹாரிஸ், நாதன் லையன் போன்ற பந்து வீச்சாளர்கள், கிளார்க், வார்னர், ஷேன் வாட்சன் ஆகிய மட்டையாளர்கள் முக்கியமான பங்கைச் செலுத்தினார்கள். ஸ்டீவன் ஸ்மித் என்னும் இளம் வீரர் இரண்டு சதங்களை அடித்தார். இவர் அடிக்கும் ரன்களைவிட அவற்றை அடிக்கும் விதம் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. நெருக்கடியோ எதிரணியின் கடுமையான தாக்குதலோ இவரை அசர வைப்பதில்லை. நல்ல பந்துகளையும் பதம் பார்க்கும் கலை இவருக்குக் கைவந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு சமயத்தில் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தினார்கள்.
இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்து சறுக்கல்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறப்பாக ஆடிவரும் கேப்டன் அலிஸ்டர் குக் இந்தத் தொடரில் சறுக்கினார். நான்கு அரை சதங்களை எடுத்தார். ஒரு சதம்கூட அடிக்கவில்லை. அவருடைய சிறந்த ஆட்டத் திறன் வெளிப்படவில்லை. நெருக்கடியான கட்டங்களில் தாக்குப் பிடித்து நிற்காமல் விரைவிலேயே ஆட்டமிழந்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் தோல்வியின் சுமை அவரை அழுத்தியது துல்லியமாகத் தெரிந்தது.
இது போதாதென்று ஜோனத்தன் டிராட் தொடரின் இடையில் போட்டியிலிருந்து “மன அழுத்தம்” காரனமாக விலகினார். நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன் க்ரீம் ஸ்வான் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். புதிதாக வந்த தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் கார்பெரியின் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்துக்கான அடையாளங்கள் இருந்தன என்றாலும் பெரிய அளவில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கெவின் பீட்டர்சனும் சோபிக்கவில்லை. நின்று ஆட வேண்டிய சமயத்திலும் அடித்து ஆட முயற்சி செய்து அவர் அவுட் ஆன விதம் அவரது பலவீனத்தை அம்பலப்படுத்தியது.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா தனது வலுவை மீட்டெடுத்திருக்கிறது. நெருக்கடியிலிருந்து மீண்டெழும் தனது திறனை நிரூபித்திருக்கிறது. இங்கிலாந்தில் நடந்த தொடரில் தோற்றபோதும் அதில் 3-0 என்னும் கனக்கில்தான் தோற்றது. அதிலும் ஒரு போட்டியில் வெற்றிக்கோட்டுக்கு அருகில் வந்து தோல்வி அடைந்தது. ஆனால் வெற்றிபெறும்போது எதிரணிக்கு வாய்ப்பே கொடுக்காமல் அடித்து நொறுக்கியது. இப்போதுள்ள பந்து வீச்சும் மட்டை வலுவும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை மீண்டும் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற வைக்கும் என்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன. மைதானத்தில் விரும்பத்தகாத பேச்சுக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதால் களங்கம் அடைந்த இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய லாபம் இதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT