Published : 25 Nov 2014 02:48 PM
Last Updated : 25 Nov 2014 02:48 PM

பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி மண்டையில் பந்து பயங்கரமாகத் தாக்க அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி தள்ளாடினார். ஆனால் உடனடியாக பிட்சில் மயங்கி விழுந்தார்.

மயங்கி விழும் போதும் தரையில் தலை சற்றே வேகமாக மோதியுள்ளது. பவுன்சரை ஹூக் அட முயன்றார் ஆனால் பந்து மட்டையில் சிக்கவில்லை. இதனையடுத்து மூளையை தாக்கும் விதமாக மண்டையில் அடிபட்டுள்ளது.

உடனடியாக மைதானத்திற்கு உதவி வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அடிபட்டதினால் மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் அல்லது அதிர்ச்சியை குறைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

அறுவை சிகிச்சையின் விளைவுகள் தெரிய 24 மணி முதல் 48 மணி நேரங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமா நிலைக்கு செலுத்தப்பட்டுள்ளார். உயிர்காப்பு அமைப்புகளுடன் அவர் தற்போது இருந்து வருகிறார். இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

இன்று இவர் ஆடும்போது மைதானத்தில் இவரது ஆட்டத்தை இவரது தாயாரும், சகோதரியும் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் பில் ஹியூஸ் ஆபத்தான காயமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் இவர் உயிர் பிழைக்க தங்கள் வேண்டுதல்களை எற்கெனவே ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x