Published : 05 Aug 2016 02:49 PM
Last Updated : 05 Aug 2016 02:49 PM

ஹெராத் அபார ஹாட்ரிக்: 106 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

கால்லே மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-நாள் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது ஆகக்குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரங்கனா ஹெராத் 25-வது ஓவரின் 4, 5, மற்றும் 6-வது பந்தில் முறையே வோஜஸ் (8), நெவில் (0), ஸ்டார்க் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆஸ்திரேலியா 106 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தன் முதல் இன்னிங்சில் 281 ரன்கள் எடுக்க (மீண்டும் மெண்டிஸ் 86) தற்போது 2-வது இன்னிங்சில் இலங்கை அணி 6விக்கெட்டுகள் இழப்புக்கு 121ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து லயனிடம் சற்று முன் ஆட்டமிழந்தார். தனஞ்ஜய டிசில்வா 9 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

இன்று காலை 54/2 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா அடுத்த 52 ரன்களுக்கு ஹெராத், திலுருவன் பெரேரா சுழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மீதி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுக்குச் சுருண்டது.

2-ம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 11 விக்கெட்டுகள் விழுந்தது ஏதாவது சாதனையாக இருக்கலாம். உஸ்மான் கவாஜா 11 ரன்களில் ஆஃப் ஸ்பின்னர் திலுருவன் பெரேராவின் வொர்க் அவுட்டுக்கு பணிந்தார், ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை கவாஜாவுக்கு வெளியே திருப்பி கொண்டிருந்த பெரேரா ஒரு பந்தை அதே லெந்தில் பிட்ச் செய்து திருப்பாமல் விட்டார், பின்னால் சென்று ஸ்பின்னரை ஆடும் கெட்டப் பழக்கம் உள்ள ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருவரான கவாஜா பவுல்டு ஆனார்.

முன்னதாக ஸ்மித்துக்கு ஒரு பந்தை ஹெராத் ஆஃப் அண்ட் மிடிலிலிருந்து வெளியே திருப்ப பீட் ஆன ஸ்மித் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை சந்திமால் தவறவிட்டார்., ஆனால் இதை ஸ்மித் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை,, ஹெராத் பந்தில் உடனடியாக பவுல்டு ஆனார்.

ஹெராத் வீசிய 7-வது ஓவரில்தான் வோஜஸ், நெவில், ஸ்டர்க் ஆகியோர் ஆட்டமிழந்தனர். வோஜஸ் கவர் திசையில் கருணரத்னவின் அருமையான கேட்சுக்கு முதலில் வெளியேறினார். அடுத்த பந்து ஹெராத் உள்ளே கொண்டு வர பீட் ஆகி கால்காப்பில் வாங்கினார் நெவில் நேர் அவுட். மிட்செல் ஸ்டார்க்கும் கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். நுவான் சோய்ஸாவுக்கு பிறகு டெஸ்ட் ஹாட்ரிக் எடுத்த பவுலர் ஆனார் ஹெராத்.

நேதன் லயன் ஷார்ட் லெக்கில் மெண்டிஸின் அருமையான கேட்சிற்கு பெரேராவிடம் அவுட் ஆனார். கடைசியில் ஹெராத் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய மிட்செல் மார்ஷ் 27 ரன்களில் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் பந்தில் லாங் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா 33.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 106 ரன்களுக்குச் சுருண்டது.

தற்போது இலங்கை 2-வது இன்னிங்சில் 143/6 என்ற நிலையில் 318 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹெராத் 4 விக்கெட்டுகளையும் பெரேரா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x