Published : 10 May 2017 02:31 PM
Last Updated : 10 May 2017 02:31 PM

‘கோலி, கெய்ல், தோனியை வீழ்த்திய பேசில் தம்ப்பி வெகு வேகமாக வளர்ந்து வருகிறார்’

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் சற்றும் எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக ஆடும் வீரர்களில் குறிப்பாக கேரள வேகப்பந்து வீச்சாளர் பேசில் தம்ப்பி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கேரள கிரிக்கெட் சங்கத்தில் இயக்குநராக இருந்த இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சந்திரகாந்த் பண்டிட் முதன் முதலில் பேசில் தம்ப்பியின் பந்து வீச்சை பார்த்து அதிசயித்ததாக தெரிவித்தார்.

வயநாடில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மைதானத்தில் வலுவான சுருட்டைத் தலை இளம் வீரர் ஒருவர் வீசுவதைப் பாருங்கள் என்று சந்திரகாந்த் பண்டிட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது தம்ப்பி இன்னும் முதல் தர கிரிக்கெட்டுக்குள் நுழையாத காலம். அப்போது சந்திரகாந்த் பண்டிட்டை கவர்ந்தது தம்ப்பி வீசிய வேகம்.

ஆனால் தெற்குமண்டல டி20 கிரிக்கெட் தொடரில்தான் முதன் முதலாக பாசில் தம்ப்பியின் வேகப்பந்து வீச்சின் தரம் பற்றி தெரியவந்தது. சீராக 140-145 கிமீ வேகத்தில் அவர் வீசுவதைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது வலைப்பயிற்சியில் இந்திய டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கு வீச தம்ப்பி அழைக்கப்பட்டார்.

இவர் இந்திய டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கு வீசிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில்தான் பெங்களூருவில் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் லயன்ஸ் இவரை ரூ.85 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் வீசும் வேகம், லெந்த், பந்தின் எழுச்சி, இவரது யார்க்கர்கள் ஸ்டீவ் ஸ்மித் போன்ற பெரிய பேட்ஸ்மென்களையே மிரட்டியது. முதன் முதலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போதே ஜாம்பவான்களான கோலி, கெய்ல், தோனி ஆகியோரை வீழ்த்தினார். கெய்ல் ஒரு போட்டியில் இவரை எதிர்கொள்ள முடியாமல் திணறியது கண்கூடு.

இந்நிலையில் த இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஒரு மாதம் எனக்கு அருமையாக அமைந்தது. கிரேட் பேட்ஸ்மென்களுக்கு வீசுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

இவரது முதல் விக்கெட் கிறிஸ் கெய்ல். இது குறித்து அவர் கூறும்போது, “இதை விட பெரிய விக்கெட்டை நான் எதிர்பார்க்க முடியாது, யார்க்கரில் இவரை எல்.பி. ஆக்கியதை என்னால் மறக்க முடியாது. மேலும் கோலி, தோனி, மணிஷ் பாண்டே, கெய்ரன் பொலார்ட் விக்கெட்டுகளையும் என்னால் மறக்க முடியாது.

கேப்டன் ரெய்னா, பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ், பவுலிங் பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக், சக வீச்சாளர்கள் முனாஃப் படேல், பிரவீண் குமார் ஆகியோர் மிக பெரிய அளவில் எனக்கு உதவி புரிந்தனர்.

பிரெண்டன் மெக்கல்லம், டிவைன் பிராவோ, டிவைன் ஸ்மித், பிஞ்ச், ஜேசன் ராய், ஜேம்ஸ் பாக்னர், ஜடேஜா ஆகியோருடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வது எனக்குக் கிடைத்த பேறு.

தற்போது மேலும் கூடுதல் ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவற்றைப் பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் என் பந்து வீச்சு வேகத்தில் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை” என்று கூறும் தம்ப்பி விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x