Published : 21 Mar 2017 03:32 PM
Last Updated : 21 Mar 2017 03:32 PM

கிரிக்கெட் ஆட்ட உணர்வை சாகடிக்கிறார்: கோலியை, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஒப்பிட்டு ஆங்கில ஊடகம் சாடல்

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் தோள்பட்டையில் காயமேற்பட்டது, அதனை பரிகாசம் செய்யும் விதமாக சில செய்கைகளை ஆஸி.வீரர்கள் செய்ததாக எழுந்துள்ள சர்ச்சையில் கோலியை அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஒப்பிட்டு ‘உலக விளையாட்டின் ட்ரம்ப் ஆகிறார் விராட் கோலி’ என்று வர்ணித்துள்ளது தி டெய்லி டெலிகிராப் என்ற ஆங்கில ஊடகம்.

ஊடகங்கள் உண்மையைக் கூறினாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல் விராட் கோலி ஊடகங்களையும் சாடுகிறார் என்று ஒப்பிடுகிறது அந்தக் கட்டுரை.

சமீபத்திய சர்ச்சை என்னவெனில், விராட் கோலி ஆட்டமிழந்த போது ஸ்மித் தன் தோள்பட்டையை பிடித்துக் காட்டி கோலியை கேலி செய்ததாக ஒரு வீடியோ பதிவு வெளியானது. ஆனால் அது ஸ்மித்தின் தோளை வேறொரு வீரர் பிடிக்கும் காட்சியாகும். இதனையடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் ராஞ்சி வந்து ஸ்மித்திடம் மன்னிப்பு கோரியுள்ளது. அதாவது கோலியின் காயத்தை ஸ்மித் கேலி செய்தார் என்ற செய்திகள் பரவுவதற்கு தவறான வீடியோ பதிவு காரணமானதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மன்னிப்புக் கோரியது.

இதனைச் செய்தியாக்கிய தி டெய்லி டெலிகிராப் ’ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு கோலியின் முதலாளியான பிசிசிஐ-யின் தாக்கம் அதிகம்’ என்று கூறியுள்ளதோடு வர்ணனை அறையில் இருந்த வி.வி.எஸ். லஷ்மணையும் லேசாக கிண்டலடித்து ‘இந்த பண்டிதரும் தவறான செய்தியைப் பரப்ப அது சமூக வலைத்தளங்களில் வைரலானது’ என்று எழுதியுள்ளது.

விராட் கோலியும் இந்தத் தோள்பட்டை கேலி விவகாரத்தை உண்மையென நம்பி, 4-ம் நாள் மாலை ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய ஓய்வறையைக் கடக்கும் போது தன் தோளை தட்டிக்காட்டிய படியே சென்றுள்ளார்.

இதனை வர்ணிக்கும் தி டெய்லி டெலிகிராப் பத்தி, “டொனால்ட் டிரம்ப் போலவே தன் முகத்தின் மீது அடிக்கப்பட்ட முட்டையை மறைக்க ஊடகத்தை குறைகூறுகிறார் விராட் கோலி” என்று எழுதியுள்ளது.

இதற்குப் பிறகு கோலி செய்தியாளர்களிடம் பேசியதை மேற்கோள் காட்டியுள்ளது, அதாவது கோலி, “எங்கள் பத்திரிகையாளர்கள் கிரிக்கெட்டைப் பற்றி கேள்வி கேட்க நீங்களோ (ஆஸி. நிருபர்கள்) சர்ச்சைக்குரியதைப் பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஆனாலும் பரவாயில்லை.

இவையெல்லாம் களத்தில் நடக்கக் கூடியதுதான். அவர்களில் 4-5 பேர் எங்கள் உடற்கோப்புப் பயிற்சியாளர் பேட்ரிக் ஃபர்ஹார்ட்டின் பெயரை கையிலெடுத்தார்கள். அவரை ஏன் இழுக்க வேண்டும், அவர் உடற்பயிற்சியாளர். அவரது வேலை எனக்கு சிகிச்சை அளிப்பதே. அவர் பெயரை ஏன் இழுக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் உங்கள் வீரர்களிடம் கேளுங்கள் ஏன் அவர் பெயரை இழுத்தீர்கள் என்று” என கூறியதை மேற்கோள் காட்டியது.

பிறகு அதே செய்தியில், ‘டேவிட் வார்னர் குழம்பினார், ‘அதிபர்’ கோலி எதைப்பற்றி பேசுகிறார் என்று’ என கோலியை கேலி பேசியுள்ளது.

வார்னர், ‘19 ஆண்டுகளாக நாங்கள் பேட்ரிக்கை அறிவோம், நாங்கள் எதற்கு அவரை மரியாதை குறைவாகப் பேச வேண்டும்’ என்றார்.

ஸ்மித் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தைப் பற்றி கூறும்போது, “நான் ஒன்றுமே செய்யவில்லை, எனக்கு கோலியின் குற்றச்சாட்டு புரியவில்லை. நான் எப்படி பேட்ரிக்கை மரியாதையின்றி பேசினேன் என்பதை கோலி களத்திலேயே தெரிவித்திருக்க வேண்டும். தோள்பட்டைக் காயத்திற்குப் பிறகு மீண்டும் கோலி இறங்கியது பேட்ரிக்கின் சிகிச்சையாலேயே” என்றார்.

இந்த மேற்கோளையும் வெளியிட்ட தி டெய்லி டெலிகிராப் கோலி இந்தத் தொடரில் ரன் எடுக்க முடியாமல் இருப்பதை மிட்செல் மார்ஷ் எடுத்த 48 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் எடுத்த 118 ரன்களுடனும் ஒப்பிட்டு கோலியை சிறுமைப் படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் ஆட்ட உணர்வை கோலி சாகடித்துள்ளார் என்றும் சாடியுள்ளது தி டெய்லி டெலிகிராப். மேலும் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுணா ரணதுங்காவுடன் கோலியை ஒப்பிட்டு ’எதிரணியினரை இருவரும் கடுமையாக மரியாதையின்றி நடத்துவர்’ என்று எழுதியுள்ளது.

கடைசியில் கட்டுரையை முடிக்கும் போது, ‘மென்மையான கிரிக்கெட் நிர்வாகிகளால் மட்டை சுழற்றும் ட்ரம்ப் எழுந்துள்ளார்’ என்று கோலியை ட்ரம்புடன் ஒப்பிட்டுள்ளது.

ஆனால் கிளென் மேக்ஸ்வெல், கோலியின் தோள்பட்டைக் காயத்தை கிண்டல் செய்தது பற்றி இந்தக் கட்டுரையில் ஒன்றுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x