Published : 18 Jun 2017 09:23 PM
Last Updated : 18 Jun 2017 09:23 PM

சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது பாகிஸ்தான்: இந்தியா பரிதாபத் தோல்வி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் ரயீஸ் நீக்கப்பட்டு முகமது அமிர் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக அசார் அலி, பஹர் ஸமான் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை மெய்டனாக வீசினார். அடுத்த இரு ஓவர்களில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜஸ்பிரித் பும்ரா வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் பஹர் ஸமான் (3), தோனியிடம் கேட்ச் கொடுத்தார்.

ஆனால் இது நடுவரால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதே ஓவரில் பஹர் ஸமான், அசார் அலி தலா ஒரு பவுண்டரி விரட்டி அதிரடி பாதைக்கு திரும்பினர். பும்ரா வீசிய 6-வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த அசார் அலி, அஸ்வின் வீசிய 8-வது ஓவரில் சிக்ஸர் விளாசினார்.

புவனேஷ்வர் குமார் மீண்டும் ஒரு முறை மெய்டன் ஓவர் வீசினார். அவர் வீசிய 9-வது ஓவரை எதிர்கொண்ட பஹர் ஸமான் ஒரு ரன்கூட சேர்க்கவில்லை. 10 ஓவர்களில் பாகிஸ்தான் 56 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு சீராக ரன் சேர்த்தது.

ஜடேஜா வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் பஹர் ஸமான் பவுண்டரி அடிக்க பாகிஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. அசார் அலி 61 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 12-வது அரை சதத்தை அடித்தார். ஜடேஜா வீசிய 20-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டிய பஹர் ஸமான் 60 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

23-வது ஓவரின் கடைசி பந்தில் தான் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 71 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 59 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா - தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டார். முதல் விக்கெட்டுக்கு பஹர் ஸமானுடன் இணைந்து அசார் அலி 128 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து பாபர் அஸாம் களமிறங்கினார். ஜடேஜா வீசிய 26-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசிய பஹர் ஸமான், அஸ்வின் வீசிய அடுத்த ஓவரையும் பதம் பார்த்தார். இந்த ஓவரில் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 17 ரன்கள் சேர்க்கப்பட்டன.

இந்த இரு ஓவர்களிலும் 33 ரன்கள் விளாசப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் ரன் விகிதம் உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய பஹர் ஸமான் 92 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை அடித்தார். இவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 33 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.

சிறப்பாக விளையாடி வந்த பஹர் ஸமான் 106 பந்துகளில், 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பாபர் அஸாமுடன் இணைந்து பஹர் ஸமான் 72 ரன்கள் சேர்த்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய ஷோயிப் மாலிக், ஜடேஜா வீசிய 37-வது ஓவரில் சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகள் விரட்டினார் பாபர் அஸாம். ஸ்கோர் 247 ஆக இருந்த போது ஷோயிப் மாலிக் (12), புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஷோயிப் மாலிக் - பாபர் அஸாம் ஜோடி 47 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முகமது ஹபீஸ் களமிறங்கினார். 40 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 41-வது ஓவரில் ஹபீஸ் 2 பவுண்டரிகள் அடித்தார்.

நிதானமாக பேட் செய்த பாபர் அஸாம் 52 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கேதார் ஜாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹபீஸ் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். கேதார் ஜாதவ் வீசிய 45-வது ஓவரில், ஹபீஸ் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டன.

முகமது ஹபீஸ் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், இமாத் வாசிம் 21 பந்துகளில் 25 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 339 ரன்கள் இலக்குடன் இந்தியா பேட் செய்தது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முகமது அமிர் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி முகமது அமிர் வீசிய 3-வது ஓவரின் 3-வது பந்தை சிலிப் திசையில் அடித்தார். ஆனால் இதை அசார் அலி பிடிக்காமல் கோட்டை விட்டார்.

எனினும் இந்த வாய்ப்பை கோலி சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அடுத்த பந்திலேயே பாயின்ட் திசையில் நின்ற ஷதப் கானிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். கோலி 9 பந்தில் 5 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து யுவராஜ் களமிறங்கினார்.

22 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவண், சர்ப்ராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டையும் முகமது அமிர் கைப்பற்றினார். 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் யுவராஜ் சிங்குடன், தோனி இணைந்தார்.

யுவராஜ் சிங் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஷதப் கான் பந்திலும், தோனி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலி பந்திலும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து கடும் பின்னடைவை சந்தித்தது. அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

எனினும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி நம்பிக்கையை ஏற்படுத்தினார். அவர் 43 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசிய நிலையில் ஜடேஜா செய்த தவறால் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது ஸ்கோர் 26.3 ஓவர்களில் 152 ஆக இருந்தது.

சிறிது நேரத்தில் ஜடேஜா 15 ரன் களில் ஜூனைத் கான் பந்தில் ஆட்ட மிழந்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் 1, பும்ரா 1 ரன்களில் வெளி யேற இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதன்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.

நோ பால் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் பஹர் ஸமான் (3), தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் இது நோபாலாக அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்ட பஹர் ஸமான் 114 ரன்கள் விளாசி மிரட்டினார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 49-வது ஓவரை வீசிய போதும் பும்ரா இரு நோ பால் வீசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x