Published : 06 Feb 2016 05:29 PM
Last Updated : 06 Feb 2016 05:29 PM
ஐபிஎல் கிரிக்கெட்டின் புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் தனது அணியில் ஏற்கெனவே தமிழக ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்த நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் மற்றொரு தமிழக லெக் ஸ்பின்னரான எம்.அஸ்வின் என்பவரை ரூ.4.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
எனவே தோனி அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அஸ்வின்கள் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் ஆஃப் ஸ்பின்னர் என்றால் எம்.அஸ்வின் லெக் ஸ்பின்னர் ஆவார்.
யார் இந்த எம்.அஸ்வின்?
எழுத்தாளர் இரா.முருகனின் மகன்தான் இந்த அஸ்வின், தந்தை இரா.முருகன் எச்.சி.எல் நிறுவனத்தில் பணியாற்றுவதோடு, சில தமிழ்ப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
தனது தந்தை பற்றி எம்.அஸ்வின் தனது 2012-ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் கூறும்போது, “என்னுடைய கல்வி மற்றும் கிரிக்கெட் ஆட்டம் ஆகியவை ஒன்றையொன்று பாதிக்காமல் இரண்டையும் சிறப்பாகக் கவனிப்பதை எனது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டேன், அவர் அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் கமல்ஹாசனை சந்தித்து திரைப்பட வேலைகளையும் கவனிப்பார். அவரால் கடினமாக உழைக்க முடியும் போது என்னால் முடியாதா என்ற உறுதியை வளர்த்துக் கொண்டேன்” என்றார்.
சிறு பிராயத்தில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்த போது ஆஸ்திரேலிய சுழற்பந்து மேதை ஷேன் வார்னின் பந்துவீச்சைக்கண்டு அஸ்வின் ஈர்க்கப்பட்டு லெக்ஸ்பின்னராக வர முடிவெடுத்தார். பிறகு அனில் கும்ளே பந்து வீச்சையும் இவர் கூர்ந்து கவனித்துள்ளார். தமிழகத்திலிருந்து சிறப்பு வாய்ந்த லெக் ஸ்பின்னர்கள் வி.வி.குமார் மற்றும் சிவராம கிருஷ்ணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக முருகன் அஸ்வின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“நான் 6 வயதாக இருக்கும் போது வார்ன், கும்ளே ஆகியோரைப் பார்த்து லெக் ஸ்பின் வீசத் தொடங்கினேன். பிறகு சி.எஸ்.சுரேஷ் குமார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்” என்கிறார் அஸ்வின்.
தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக இவர் தனது முதல் போட்டியை ஒடிஷா அணிக்கு எதிராக தொடங்கினார். 3 முதல் தர போட்டிகளில் இவர் ஆடியுள்ளார். 2 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 6 டி20 போட்டிகளிலும் இதுவரை ஆடியுள்ளார் இதில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT