Published : 12 Jan 2017 06:08 PM
Last Updated : 12 Jan 2017 06:08 PM
மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி இங்கிலாந்து லெவனை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 10.2 ஓவர்கள் மீதம் வைத்து அதிரடி முறையில் வெற்றி கண்டது.
தோனி தலைமை இந்தியா ஏ அணி அன்று 304 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அதனை அனாயசமாக துரத்தி வென்றதை போல் இன்று ரஹானே கேப்டன் செய்த இந்தியா ஏ அணி இங்கிலாந்தின் 282 ரன்களை விரட்டி 39.4 ஓவர்களில் 283/4 என்று வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து லெவன் அணி 116/1 என்ற நிலையிலிருந்து 211/9 என்று சரிவு கண்டது. ஆனால் அதன் பிறகு அடில் ரஷீத் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களைச் சேர்த்தா, ஆனால் மறு முனையில் டி.ஜே.வில்லே, 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 38 ரன்களை விளாச இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 9.5 ஓவர்களில் 71 ரன்களை விளாசியதால் இங்கிலாந்து 48.5 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தொடக்கத்தில் அதிரடி வீரர் ஜேசன் ராய் 15 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் சங்வானிடம் ஹிட் விக்கெட் ஆனார். ஹேல்ஸ் 53 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 65 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்களையும் எடுக்க கேப்டன் இயான் மோர்கன், பட்லர் ஆகியோர் டக் அவுட் ஆக, மொயின் அலி 1 ரன்னில் டிண்டாவிடம் வெளியேற 116/1 என்றிருந்த இங்கிலாந்து 29-வது ஓவரில் 165/6 என்று சரிந்தது. பென்ஸ்டோக்ஸ் 56 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. காரணம் இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் மற்றும் காஷ்மீரின் ஆஃப் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூலும் இவரைக் கட்டிப்போட்டனர்.
பர்வேஸ் ரசூல், ஸ்டோக்ஸ், பட்லர், வோக்ஸ் ஆகிய மிக முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 ஓவர்களில் 1 மெய்டனுடன் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷாபாஸ் நதீமும் சிக்கனமாக வீசி 10 ஒவர்களில் 41 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். விக்கெட் கீப்பராக அதிரடி வீரர் பந்த் 4 கேட்ச்களை பிடித்தார். இங்கிலாந்து 282 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ரஹானே, ஜாக்சன் அபாரத் தொடக்கம், ரிஷப் பந்த் அதிரடி
283 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா ஏ தொடக்க வீரர்கள் ரஹானே மற்றும் சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் இணைந்து 18.5 ஓவர்களில் 119 ரன்களைச் சேர்த்தனர். 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த ஜாக்சன் முதலில் வெளியேறினார். அலி இவர் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன் பிறகு ரஞ்சியில் கலக்கி வரும் 48 பந்து சத சாதனை நாயகன் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார்.
அவர் உள்நாட்டு பவுலர்களை எப்படி ஆடுவாரோ அப்படித்தான் இங்கிலாந்து பவுலர்களையும் ஆடினார், எந்த வித பதற்றமும் அற்ற இன்னிங்ஸில் 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தார், பந்தும் ரஹானேயும் ஜோடி சேர்ந்து 9 ஓவர்களில் 78 ரன்களை விளாசியதில் ரிஷப் பந்த் 59 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆட்டமிழந்த பிறகு சுரேஷ் ரெய்னா தன் வழக்கமான பாணியில் 34 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்களை விளாசினார். ரஹானே 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 83 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து வெற்றிக்கு நல்ல அடித்தளமிட்டு ஆட்டமிழந்தார்.
36.4 ஓவர்களில் 268/4 என்ற நிலையிலிருந்து ஹூடா (23 நாட் அவுட்), இசான் கிஷன் (5 நாட் அவுட்) 39.4 ஓவர்களில் 283 ரன்களை எட்ட 6 விக்கெட்டுகளில் இந்தியா ஏ வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், டி.ஜே.வில்லே, ரஷீத், மொயின் அலி ஆகியோர் ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் விளாசப்பட்டனர், லியாம் பிளங்கெட் 3 ஒவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்தார், அதன் பிறகு வீச அழைக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT