Published : 18 Aug 2016 08:40 AM
Last Updated : 18 Aug 2016 08:40 AM

நெய்மரின் அதிவேக கோல் சாதனையுடன் இறுதியில் பிரேசில்

ரியோ ஒலிம்பிக் போட்டி கால்பந்தாட்டத்தில் ஹோண்டூராஸ் அணியை பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதன் மூலம் இறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கிறது. 2014 உலகக்கோப்பையில் 7-1 என்ற கோல் கணக்கில் தங்கள் சொந்த மண்ணில் தங்களை மண்ணைக் கவ்வ வைத்து அழவிட்ட ஜெர்மனியை வீழ்த்த இன்னொரு சந்தர்ப்பம் பிரேசில் அணிக்குக் கிடைத்துள்ளது. சனிக்கிழமையன்று பிரேசில்-ஜெர்மனி இறுதி நடைபெறுகிறது.

நெய்மர் ஆட்டம் தொடங்கி 15-வது விநாடியில் கோல் அடித்து அதிவேக தொடக்க கோலுக்கான ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தியதோடி மேலும் ஒரு கோலையும் அடித்தார்.

நடப்பு ஒலிம்பிக்கில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரின் ஆட்டம் கடும் விமர்சனத்துக்குள்ளானது, 2 ஆட்டங்களில் பிரேசில் 0-0 என்று டிரா செய்தபோது நெய்மரின் ஆட்டம் அவரது திறமைகளை சந்தேகிக்கும் விதமாக அமைந்ததாக விமர்சகர்கள் எழுதத் தொடங்கினர்.

ஆட்டம் தொடங்கி 15-வது விநாடியிலேயே ஹோண்டுராஸ் தடுப்பாட்ட வீரர் ஜானி பலேசியாசிடமிருந்து நெய்மர் பந்தை பறித்துச் சென்றார், இது ஹோண்டுராஸ் பாக்ஸ் பகுதிக்குள் நிகழ நெய்மர் முதல் கோலை அடித்தார், அதாவது ஹோண்டுராஸ் கோல் கீப்பர் லோபஸ் நெய்மரின் வயிற்றில் பட்டு வந்த பந்தை தடுக்க முன்னேறி வந்த போது பந்து காலி கோலுக்குள் சென்றது. 15 விநாடிகளில் கோல் என்பது புதிய உலக சாதனை.

உலகக்கோப்பை காலிறுதியில் கொலம்பியாவுக்கு எதிராக முதுகுத் தண்டு காயம் ஏற்பட்டு கண்ணீருடன் வெளியேறியது போல் இந்தப் போட்டியிலும் சவாலான ஆட்டத்தில் காயம் பட்டு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இம்முறை அவர் காயத்திலிருந்து மீண்டு களம் புகுந்தார்.

மீண்டும் ஹோண்டுராஸ் தடுப்பு வியூகத்தை தனது டிரிபிளிங்கினால் கடும் நெருக்கடிக்குள்ளாக்கினார், இதில் நெய்மரை எப்படியாவது அடக்கியாள வேண்டும் என்று ஃபவுல் ஆட்டத்தைக் கடைபிடித்த ஹோண்டுராஸ் வீரர்கள் இருவருக்கு அட்டை காண்பிக்கப்பட்டது.

நெய்மர் அச்சுறுத்தினாலும் பிரேசிலுக்காக இடைவேளைக்கு முன் கோல் அடித்தது கேப்ரியல் ஜீஸஸ். லுவானின் அருமையான பாஸை ஜீஸஸ் கோலாக மாற்றினார். இதற்கு 9 நிமிடங்கள் கழித்து நெய்மர் பந்தை அருமையாக இடது புறம் அடிக்க அங்கு இதே கேப்ரியல் ஜீஸஸ் உள்ளே புகுந்து பந்தை கோல் நோக்கி அடித்து தனது இன்னொரு கோலாக்கினார்.

மார்கினோஸ் 51-வது நிமிடத்திலும் லுவான் 79-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க 5-0 என்ற நிலையில் ஆட்டத்தின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் பிரேசில் வீரர் லுவானை ஹோண்டுராஸ் வீரர் பலேசியஸ் பெனால்டி பகுதிக்குள் தள்ளி விட்டு ஃபவுல் செய்ய பெனால்டி வாய்ப்பு கிட்டியது.

இதனை நெய்மர் கோலாக மாற்றினார். பிரேசில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x