Last Updated : 30 Dec, 2013 11:16 AM

 

Published : 30 Dec 2013 11:16 AM
Last Updated : 30 Dec 2013 11:16 AM

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

2014 ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. ஆடவர் ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகள் இடம்பெற்றுள்ள இந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி போட்டியான இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. முன்னாள் சாம்பியன்களான ரஷியாவின் மிகைல் யூஸ்னி, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி, பிரான்ஸின் பெனாய்ட் பேர், கனடாவின் வசேக் போஸ்பிஸில், ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸ், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஸ்பெயினின் ராபர்ட்டோ பௌதிஸ்டா அகட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பதால் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

போட்டித் தரவரிசையில் முறையே முதல் 4 இடங்களில் உள்ள ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, மிகைல் யூஸ்னி, ஃபாபியோ ஃபாக்னினி, பெனாய்ட் பேர் ஆகிய 4 பேரும் முதல் சுற்றில் விளையாடாமல் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்பதற்கு “பை” வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் 4 பேரும் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களமிறங்குவார்கள்.

இந்தியர்களுக்கு வாய்ப்பு எப்படி?

ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவிலி ருந்து சோம்தேவ், யூகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகிய 3 பேர் பங்கேற்கிறார்கள். இவர்களில் சோம்தேவ் தரவரிசை அடிப்படை யில் நேரடித்தகுதி பெற்றிருக்கிறார். இளம் வீரர்களான யூகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகி யோர் வைல்ட்கார்ட் மூலம் பங்கேற் கின்றனர்.

சோம்தேவ் தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரை சந்திக்கிறார். சோம்தேவுடன் விளையாடும் தகுதிச்சுற்று வீரர் யார் என்பது திங்கள்கிழமை தெரியவரும். அதேநேரத்தில் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 64-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பேப்லோ பஸ்டாவையும், ஜீவன் நெடுஞ்செழியன் தனது முதல் சுற்றில் தரவரிசையில் 85-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவையும் சந்திக்கின்றனர். யூகி, ஜீவன் ஆகியோருக்கு முதல்சுற்றே கடினமானதாக அமைந்துள்ளது.

சோம்தேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மார்செலோ கிரானோலர்ஸை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்தியர்கள் காலிறுதிக்கு முன்னேறினாலே அது பெரிய விஷயமாக இருக்கும். சர்வதேச தரவரிசையில் முதல் 95 இடங்களுக்குள் இருக்கும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை ஓபனில் பங்கேற்பதால் போட்டி கடும் சவாலாக இருக்கும்.

வாவ்ரிங்கா, யூஸ்னிக்கு வாய்ப்பு

முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்காவும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டும் ஒரு காலிறு தியில் மோதலாம். இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னியும், கனடாவின் வசேக் போஸ்பிஸிலும் மற்றொரு காலிறுதியில் மோத வாய்ப்புள்ளது. இவர்களில் வாவ்ரிங்கா, ஃபாபியோ ஃபாக்னினி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறிய வாவ்ரிங்கா இந்த முறை சென்னை ஓபனில் பட்டம் வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸின் பெனாய்ட் பேர், ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸ் ஆகியோர் 3-வது காலிறுதியிலும், பிரான்ஸின் ரோஜர் வேஸ்லின், ரஷியாவின் மிகைல் யூஸ்னி ஆகியோர் 4-வது காலிறுதியிலும் மோத வாய்ப்புள்ளன. இந்த நால்வரில் கிரானோலர்ஸ், மிகைல் யூஸ்னி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பிருந்தாலும், யூஸ்னிக்கே இறுதிச்சுற்று வாய்ப்பு அதிகமாக உள்ளது. வாவ்ரிங் காவுக்கு அடுத்தபடியாக யூஸ்னி, ஃபாக்னினி, கிரானோலர்ஸ் ஆகியோ ரும் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது.

இரட்டையர் பிரிவில் 7 இந்தியர்கள்

இரட்டையர் பிரிவைப் பொறுத்த வரையில் இந்தோ-பாக் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தான் அய்ஸம் உல் ஹக் குரேஷி ஆகியோர் தங்களின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடியை சந்திக்கிறது. இதில் வெற்றிபெறும் ஜோடி எளிதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இந்தியாவின் லியாண்டர் பயஸ்-இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி ஜோடி இரட்டையர் பிரிவில் மற்றொரு வலுவான ஜோடியாகும். இந்த ஜோடிக்கு அரையிறுதி வரை எவ்வித சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடி பட்டம் வெல்ல அதிக வாய்ப் பிருக்கிறது.

இறுதிச்சுற்றுக்கு முன்னதாக போட்டித் தரவரிசையில் முதலிடத் தில் இருக்கும் போபண்ணா ஜோடியும், 2-வது இடத்தில் இருக்கும் பயஸ் ஜோடியும் சந்திக்க வாய்ப்பில்லை. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-ஸ்ரீராம் பாலாஜி ஜோடிக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி ரஷியாவின் கரேன் கச்சனோவு டனும், திவிஜ் சரண் சீன தைபேவின் யென்-சன் லூவுடனும், பூரவ் ராஜா இஸ்ரேலின் டூடி செலாவுடனும் ஜோடி சேர்ந்து விளையாடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x