Published : 22 Feb 2017 10:25 AM
Last Updated : 22 Feb 2017 10:25 AM
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டு பிரீஸ் 40, லிஸ்லே லீ 37, நிகேர்க் 37, சுனே லஸ் 35 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ராஜேஷ்வரி கேட்வாட் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
245 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் ஹர்மான்பிரித் கவுர், பூனம் யாதவ் நின்றனர். லெட்சோலா வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் இரு ரன்கள் சேர்க்க முயன்றபோது பூனம் யாதவ் ரன் அவுட் ஆனார். அடுத்த 3 பந்துகளையும் ஹர்மான்பிரித் கவுர் வீணடித்தார். இதனால் ஆட்டம் பரப்பானது. கடைசி இரு பந்துகளில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5-வது பந்தை ஹர்மான்பிரித் கவுர் சிக்ஸருக்கு விளாச நம்பிக்கை பிறந்தது.
கடைசி பந்தில் அவர் மேலும் இரு ரன்கள் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மான்பிரித் கவுர் ஆட்ட மிழக்காமல் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக திருஷ் காமினி 10, மோனா மேஷ்ராம் 59, தீப்தி சர்மா 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந் திருந்தனர். ஆட்ட நாயகியாக தீப்தி சர்மா தேர்வானார். தொடர் நாயகி யாக தென் ஆப்பிரிக்க அணியின் சுனே லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் சுற்றிலேயே உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைந்துவிட்டன என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த இரு அணிகளுடன் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பிரதான சுற்றுக்குள் நுழைந் துள்ளன.
ஏற்கெனவே ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற் கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் 24-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT