Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் 5-ம் நிலை வீரரான டெல் போட்ரோ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கை வீழ்த்தி ஆட்டத்தை 53 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்த ஆட்டத்தில் 8 ஏஸ் சர்வீஸ்களை அடித்த டெல் போட்ரோ, முதல் செட்டில் 7 மற்றும் 9-வது கேம்களிலும், 2-வது செட்டில் 4 மற்றும் 6-வது கேம்களிலும் டாமிக்கின் சர்வீஸை முறியடித்தார். மிக அற்புதமாக ஃபோர்ஹேண்ட் ஷாட்களை ஆடிய டாமிக், ஏஸ் சர்வீஸ் அடித்து போட்டியை வெற்றியில் முடித்தார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் சர்வதேச தரவரிசையில் 52-வது இடத்தில் இருக்கும் டாமிக்கிற்கு எதிராக 2-வது வெற்றியைப் பதிவு செய்தார் டெல் போட்ரோ.
இது ஜுவான் மார்ட்டினின் 18-வது சாம்பியன் பட்டமாகும். 2009-ல் சிட்னி டென்னிஸ் போட்டியில் டேவிட் நல்பாண்டியன் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்குப் பிறகு சிட்னியில் பட்டம் வென்ற மற்றொரு ஆர்ஜென்டீன வீரர் டெல் போட்ரோ ஆவார்.
திங்கள்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் டெல் போட்ரோ, தகுதிநிலை வீரரையும், டாமிக், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலையும் சந்திக்கவுள்ளனர். நடாலும், டெல் போட்ரோவும் காலிறுதியில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கவுள்ள போபண்ணா-குரேஷி ஜோடிக்கு சிட்னி டென்னிஸ் போட்டி நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த ஜோடி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் பட்டம் வெல்வதற்காகக் காத்திருக்கிறது. 2010-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய போபண்ணா-குரேஷி ஜோடி, அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களிடம் தோல்வி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT