Published : 04 Jan 2017 05:01 PM
Last Updated : 04 Jan 2017 05:01 PM

ஹேண்ட்ஸ்கோம்ப் சதத்துடன் ஆஸி. 538 ரன்கள் டிக்ளேர்; பாகிஸ்தான் 126/2

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 538 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

யூனிஸ் கான் 64 ரன்களுடனும், மீண்டும் அசார அலி சிறப்பாக ஆடி 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் ஒரே ஓவரில் பாகிஸ்தான் ஷர்ஜீல் கான், பாபர் ஆஸம் ஆகியோரை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். 6/2 என்று தடுமாறிய பாகிஸ்தானை அசார் அலியும், யூனிஸ் கானும் 120 ரன்கள் சேர்த்து நிலை நிறுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் நேற்று வார்னர் பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்து உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் எடுத்ததோடு அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரர் ரென்ஷா 184 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 110 ரன்களையும் எடுத்தனர்.

பாகிஸ்தன் பீல்டிங் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக அமைந்தது. பந்து வீச்சில் முன்னேற்றம் தெரிந்தாலும் பீல்டிங் மீண்டும் பாகிஸ்தானை கைவிட்டது. இதனால் 21 வயதில் தொடக்க வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோரான 184 ரன்களை அவர் எடுத்தார். இதில் 20 பவுண்டரிகளை அவர் அடித்தார். இம்ரான் கான் நன்றாக வீசிய நிலையில் அவரது பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டு ரென்ஷா ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் பெரும்பாலும் ஸ்வீப் ஷாட்களை பயன்படுத்தி ரன்களை எடுத்தார். 90களில் தடுமாறினாலும் சதத்தைக் கடந்தார். 205 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 110 ரன்களை எடுத்த இவர் மிகவும் விசித்திரமாக ஹிட்விக்கெட் ஆனார். வஹாப் ரியாஸின் வைடு யார்க்கரை ரீச் செய்ய முடிவெடுத்து மட்டையை மேலிருந்து கொண்டு வரும் வழியில் லெக் பைல் கீழே விழுந்தது, ஆனால் அது எப்படி விழுந்தது என்ற மர்மம் நீடித்தது. இருப்பினும் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஹில்டன் கார்ட்ரைட் பொறுமையைக் கடைபிடித்தார். இவருக்கு 2 வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. இதனால் 37 ரன்கள் எடுத்து கடைசியில் இம்ரான் பந்தில் பவுல்டு ஆனார். மேத்யூ வேட் (29), மிட்செல் ஸ்டார்க் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் என்று ஸ்கோர் 538 ரன்களை எட்ட ஸ்மித் டிக்ளேர் செய்தார்.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அசார் அலி, இம்ரான் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மீண்டும் யாசிர் ஷாவுக்கு சாத்துமுறை நடந்தது, இவர் 167 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸை தொடர்ந்த போது ஆஸ்திரேலியா பீல்டிங்கிலும் சில ஓட்டைகள் தென் படத்தொடங்கின. வார்னர் 2 ரன் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டதோடு லெக் ஸ்லிப்பில் ஆட்டம் முடியும் தறுவாயில் நேதன் லயன் பந்தில் கேட்ச் வாய்ப்பு ஒன்றையும் நழுவ விட்டார். முதல் ரன் அவுட் மிகவும் மோசமான பிழை. அசார் அலி ஓட்டத்தைக் கைவிட்டு நடு பிட்சில் நிற்க, வார்னர் பவுலர் ஸ்டார்க்கிடம் த்ரோ செய்வதற்குப் பதிலாக நேரடியாக ஸ்டம்பை அடிக்கும் முயற்சியில் தோல்வி கண்டார்.

ஹேசில்வுட் ஒரே ஓவரில் ஷர்ஜீல் கான், மற்றும் பாபர் ஆஸமை வீழ்த்தினார். 6/2 என்ற நிலையிலிருந்து 126/2 என்று கொண்டு சென்றனர். சில அருமையான பவுண்டரிகளை அடித்தனர், பிட்சில் நிறைய ரன்கள் உள்ளதாகவே தெரிகிறது, ஆனால் மெல்பர்ன் ஆவி பாகிஸ்தானை நாளை பீடித்தால் மீண்டும் ஒரு சரிவைச் சந்திக்கலாம், இல்லையெனில் ஆஸ்திரேலியா ஸ்கோருக்கு அருகில் பாகிஸ்தானால் வர முடியும் அளவுக்குத்தான் பிட்ச் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x