Published : 05 Jan 2015 03:15 PM
Last Updated : 05 Jan 2015 03:15 PM
பத்ம பூஷண் விருதுக்கு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பெயரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாய்னா நேவாலின் சாதனைகளை கருத்தில் கொண்டு அவரது பெயர் பத்ம பூஷண் விருதுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டாலும், சிறப்பு அந்தஸ்து வழங்கி அவரது பெயர் பரிந்துரைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்க வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு, இந்திய பேட்மிண்டன் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது. ஆனால், சாய்னா பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்தது.
பத்ம ஸ்ரீ விருது பெற்று 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தைக் கூறி, அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கும்படி விளையாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பத்ம பூஷண் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தன் பெயர் இல்லாதது குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சாய்னா பேசுகையில், ''2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற பிறகு, பத்ம பூஷண் விருதுக்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்தேன். பத்ம ஸ்ரீ விருது பெற்று 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தைக்கூறி, அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கும்படி விளையாட்டு அமைச்சகம் கூறியது.
ஆனால், 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெயரை பத்ம பூஷண் விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்படி இருக்கையில், விளையாட்டுத் துறை அமைச்சகம் என் பெயரைப் பரிந்துரை செய்யாதது வருத்தம் அளிக்கிறது'' என்று கூறியிருந்தார்.
சாய்னா வருத்தம் தெரிவித்திருந்ததை அடுத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், விருதுக்கு அவரது பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT