Published : 06 Nov 2014 11:50 AM
Last Updated : 06 Nov 2014 11:50 AM

அகமதாபாத்தில் இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்: வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்தியா

இந்திய-இலங்கை அணி களுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாதில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் இலங்கையை எதிர்கொள்கிறது.

அதேநேரத்தில் இலங்கை அணியில் மலிங்கா, ஹெராத் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இடம்பெறாததால் அந்த அணி தடுமாறி வருகிறது.

கடந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்த அஜிங்க்ய ரஹானே-ஷிகர் தவன் ஜோடி இந்த ஆட்டத்திலும் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாட காத்திருக்கிறது. இந்தியாவின் தொடக்க ஜோடி மற்றும் விராட் கோலி, ரெய்னா ஆகியோரை ஆரம்பத்தில் வீழ்த்தாத பட்சத்தில் இலங்கை அணியால் இந்தியாவின் ரன் குவிப்பை தடுக்க முடியாது.

இந்தியாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் காயமடைந்த வருண் ஆரோனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்படுவார் என தெரிகிறது. 3-வது வேகப்பந்து வீச்சாளராக தவல் குல்கர்னி இருந்தாலும், ஆல்ரவுண்டரான பின்னிக்கே வாய்ப்பு அதிகம். மற்ற படி பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

இலங்கை அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே தடுமாறி வருகிறது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தில்ஷான், சங்ககாரா, ஜெயவர்த்தனா ஆகி யோர் தடுமாறி வருவது கவலை யளிப்பதாக உள்ளது. இவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

அந்த அணியைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. ஒருவேளை மாற்றம் இருந்தால் பிரசன்னாவுக்குப் பதிலாக டி சில்வா சேர்க்கப்படலாம்.

போட்டி நடைபெறும் அகமதா பாத் மோதிரா மைதானத்தில் இந்திய அணி கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கிந் தியத் தீவுகளுடன் விளையாடியுள் ளது. அதில் இந்தியா 16 ரன்களில் தோல்வியடைந்துள்ளது.

போட்டி நேரம்: பிற்பகல் 1.30 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x