Published : 23 Aug 2016 02:44 PM
Last Updated : 23 Aug 2016 02:44 PM

அஸ்வின், சஹா பங்களிப்பை பாராட்டும் கேப்டன் விராட் கோலி

பின் நடுக்கள வீரர்களான அஸ்வின், சஹா பேட்டிங்கில் செய்த பங்களிப்பு தொடரை 2-0 என்று வெல்வதில் பெரிய உதவி புரிந்தது என்று டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கடைசி டெஸ்ட் போட்டி 22 ஓவர்களுடன் முழுதும் வாஷ்-அவுட் ஆக, இந்தியா 2-0 என்று தொடரைக் கைப்பற்றியது, கோலியின் தலைமையில் 3-வது டெஸ்ட் தொடர் வெற்றி. மே.இ.தீவுகளில் 2-0 என்று முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

“இந்தத் தொடர் எங்களுக்கு நல்லபடியாக அமைந்தது. நிறைய சாதகமான அம்சங்கள் கிடைத்துள்ளன. எந்தந்த புலத்தில் மேம்பாடு தேவை என்று நினைத்தோமோ அதனை ஓரளவுக்கு சாதித்தோம். என்னைப் பொறுத்தவரையில் சஹா ரன்கள் எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அதே போல் 6-ம் நிலையில் அஸ்வின் ஒரு பெரிய பங்களிப்பு செய்வதும் மிகப்பெரிய பங்களிப்பாக பார்க்கிறேன்.

ஏனெனில் ஒரு டெஸ்ட் போட்டியில் கடினமான நிலையில் இருக்கும் போது சஹா, அஸ்வின் இறங்கும் நிலை மிகவும் முக்கியமானது. அணியின் கீழ்நிலை வீரர்களும் பங்களிப்பு செய்யும் அணிகள் டெஸ்ட் போட்டிகளில் சீராக வெல்வதை பார்த்து வருகிறேன். ஏனெனில் இத்தகைய கூடுதல் ரன்கள் எதிரணியினரின் உத்வேகத்தை குறைப்பதை நான் அறிந்திருக்கிறேன். இந்த ஒன்றில் கடினமாக உழைத்து மேம்பாடு காண விழைகிறோம்.

இந்தத் தொடரில் இதனைச் செய்தோம், அதன் முடிவுகளைக் கண்கூடாக பார்க்கிறோம்.

காலேயில் டெஸ்ட் போட்டியை இழந்த போது ஒரு பேட்ஸ்மென் குறைவாக இருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் ஒரு பேட்ஸ்மென் குறைவானதால் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

உள்நாட்டில் ஆடும்போது 4 சிறந்த பவுலர்கள் போதும், 5-வது பவுலர் தேவையில்லை. ஸ்பின் சாதக விக்கெட்டுகளில் 3 ஸ்பின்னர்கள் இருந்தால் போதும் காரியம் கச்சிதமாக முடியும். 2 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் வைத்துக் கொண்டாலும் முரளி விஜய், ரோஹித் சர்மா 10 ஓவர்களை வீசுவார்கள்.

இதைத்தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஏனெனில் இந்த அணிச்சேர்க்கை வெற்றி பெற்றால் அது சவுகரியமாக உள்ளது. மேலும், ஒரே அணிச்சேர்க்கையை வைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நமக்கு எதிராக எதிரணியினர் திட்டமிட்டு கவிழ்ப்பார்கள். எனவே நெகிழ்வுத்தன்மை அவசியம்.

வேகப்பந்து வீச்சும் நன்றாக உள்ளது, தற்போது உள்ள ஷமி, இசாந்த், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் தவிர வருண் ஆரோன், தவல் குல்கர்னி உள்ளனர்.

ஷமி காயத்திலிருந்து மீண்டு முழு உடல்தகுதியுடன் வேகமும் ஸ்விங்குடன் வீசுகிறார், புவனேஷ் குமாரும் ஸ்விங், வேகம் காட்டுகிறார். இசாந்த் சர்மா சரியான இடங்களை சீரான முறையில் தாக்குகிறார். இசாந்த் 3,4 இன்னிங்ஸ்களில் விக்கெட் எடுக்காமல் இருக்கிறார், திடீரென 6-7 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், இதனால்தான் இசாந்த் சர்மா போன்ற பவுலர்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியுள்ளது. தரமான அணிகளுக்கு எதிராக தரமான பேட்ஸ்மென்களையும் அவர் சிக்கலுக்குள்ளாக்குகிறார்.

ஜாகீர் கான் ஓய்வை அடுத்து ஒரு பெரிய இடத்தை நிரப்ப வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். கடினமாக முயற்சி செய்கின்றனர், இந்தத் தொடரில் இதனை நான் பார்த்தேன், எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x