Published : 11 Jan 2017 10:00 AM
Last Updated : 11 Jan 2017 10:00 AM
இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட் கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி, அபேய் சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டதை இந்திய ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட் கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி, அபேய் சிங் சவுதாலா ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குற்ற வழக்குகள் உள்ளவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் எந்த ஒரு பதவிக்கும் தேர்தல் மூலம் போட்டியிட முடியாது என விதி உள்ளது. இதை மீறி கல்மாடி, சவுதாலா ஆகியோரை ஆயுட்கால தலைவர்களாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமசந்திரன் நியமித்திருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள இருவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவர் களாக நியமிக்கப்பட்டது விளை யாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இவர்களது நியமனத்துக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இருவரையும் பதவியில் நியமித்த முடிவை திரும்ப பெற வேண்டும். அதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் எந்த உறவும் கிடையாது, அங்கீகாரத்தையும் ரத்து செய்ய நேரிடும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் எச்சரித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப் பட்டிருந்தது. இதுஒருபுறம் இருக்க இவர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத்தலை வரான நரிந்தர் பத்ரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே கல்மாடி, ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்தார். ஆனால் அபேய் சிங் சவுதாலாவோ, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டால் மட்டுமே பதவியில் இருந்து விலகுவேன் என தெரிவித்தார்.
சுரேஷ் கல்மாடி 1996 முதல் 2011 வரை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் 10 மாதங்கள் சிறை தண்டனையையும் அனுபவித்து அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சவுதாலா 2012 டிசம்பர் முதல் 2014 பிப்ரவரி வரை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பதவி வகித்தார். இந்த காலக்கட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இடை நீக்கம் செய்திருந்தது. மேலும் சவுதாலாவின் தலைவர் பதவியை பறித்த பின்னரே இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT