Published : 16 Mar 2017 03:28 PM
Last Updated : 16 Mar 2017 03:28 PM
வெலிங்டனில் இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து தன் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் குக், எல்கர் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. இரவுக்காவலன் ரபாடா 8 ரன்களுடனும், ஆம்லா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூஸிலாந்து அணியில் காயத்தினால் ராஸ் டெய்லர், டிரெண்ட் போல்ட் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. பசுந்தரை ஆட்டக்களத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தது.
ரபாடா, மோர்கெல், மஹராஜ் ஆகியோரிடம் நியூஸிலாந்து திக்கித் திணறி 101/5 என்று ஆனது, அந்த அணியின் தொடக்க வீரர் ராவல் (36) தவிர லாதம், கேப்டன் வில்லியம்சன், நீல் புரூம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்ட ஜேம்ஸ் நீஷம் 15 ரன்களில் மஹாராஜ் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.
பிறகு ஹென்றி நிகோல்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார், பந்துகளை தூக்கித் தூக்கி அடித்து 7 பவுண்டரிகளுடன் 66 பந்துகளில் அரைசதம் எடுத்தார் பிறகு அடுத்த 84 பந்துகளில் மேலும் 5 பவுண்டரிகளுடன் 150 பந்துகளில் சதம் கண்டார். இவரும் வாட்லிங் (34) இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 116 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஹென்றி நிகோல்ஸ் 161 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்து டுமினி பந்தில் பவுல்டு ஆனார்.
கடைசியில் சவுதி 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 27 ரன்களை 30 பந்துகளில் எடுக்க, படேல் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 17 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து 101/5 என்ற நிலையிலிருந்து 268 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஜே.பி.டுமினி தன் வாழ்நாளின் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாக 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மோர்கெல், ரபாடா, மஹராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மோசமான தொடக்கம் கண்டது, தொடர்ந்து மோசமாக ஆடிவரும் குக், இந்த இன்னிங்ஸிலும் சவுதி பந்தை அடிக்காமல் தொட்டு வெளியேறினார். டீன் எல்கர் விக்கெட்டை டி கிராண்ட்ஹோம் கைப்பற்றினார், இதுவும் 2-வது ஸ்லிப்பில் நீஷமிடம் கேட்ச் ஆனது. ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 24/2 என்று உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT