Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM
மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரத்தால் கடும் காட்டம் அடைந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ், என் மீது குற்றம்சாட்டுபவர்கள் துணிவிருந்தால் நேருக்கு நேர் வாருங்கள் என சவால் விடுத்துள்ளார்.
மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக நியூஸிலாந்து முன்னாள் வீரர்கள் கெய்ன்ஸ், லோ வின்சென்ட், டேரில் டஃப்பி ஆகியோரிடம் ஐசிசி விசாரணை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் கெய்ன்ஸோ எனக்கு எதுவும் தெரியாது என கூறி வந்தார். இந்த நிலையில் நியூஸிலாந்தில் இருந்து வெளியாகும் “டொமினியன் போஸ்ட்” பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள கெய்ன்ஸ் அதில் கூறியிருப்பதாவது:
ஊடகங்கள் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டன. மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரத்தில் எனது பெயர் தொடர்புபடுத்தப்பட்டதால் நான் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணை வளையத்தில் எனது பெயர் இருந்தால், ஐசிசி என்னை நேரடியாக அணுகலாம். என் மீது குற்றம்சாட்டுபவர்கள் துணி விருந்தால் நேருக்கு நேர் வாருங்கள். என் மீது அவதூறு பரப்புவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன். கிரிக்கெட் களத்திலும் சரி, இப்போதும் சரி நான் ஒருபோதும் ஒளிந்து கொண்டு இருக்கவில்லை. என் மீது குற்றம்சாட்டியவர்கள் யார் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், அவர்களுக்கு என் பெயரைத் தெரியும். அவர்கள்தான் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். ஹலோ ஐசிசி, நான் மோசடிப் பேர்வழியல்ல. என்னை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் காணலாம்.
இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நான் என்ன சொல்வது? என்ன குற்றச்சாட்டு என்று சொல்வது? நான் இந்த கட்டுரையில் எழுதியிருப்பது போல சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்தோ அல்லது நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்தோ இந்த விவகாரம் தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக ஐசிசியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 3 பேரில் நானும் ஒருவன் என உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு தவறான தகவலை வெளியிட உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் எவ்வாறு அனுமதித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். நான் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அது அப்பட்ட மான பொய்யாகும். அது தொடர்பாக முழுமையான, முறையான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வேன் என கெய்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT