Published : 24 Sep 2016 03:27 PM
Last Updated : 24 Sep 2016 03:27 PM

முதல் டி20: இமாத் வாசிம் 5விக்.; உலக சாம்பியன் மே.இ.தீவுகளுக்கு மிகப்பெரிய தோல்வி

துபாயில் நேற்று இரவு நடைபெற்ற டி20 தொடர் முதல் போட்டியில் மே.இ.தீவுகளை பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் 5 ஓவர்களில் 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த உலக சாம்பியம் மே.இ.தீவுகள் 115 ரன்களுக்குச் சுருண்டது. இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 14.2 ஓவர்களில் 116/1 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. தொடர்ச்சியாக 2-வது 9 விக்கெட்டுகள் வித்தியாச வெற்றியை ஈட்டியுள்ளது பாகிஸ்தான்.

பிட்ச் நன்றாக உடைந்திருந்ததால் டாஸ் வென்ற பாகிஸ்தான் டி20 கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தொடகக்த்திலேயே வீசிய இமாத் வாசிம், முதலில் எவின் லூயிஸை டாப் எட்ச் செய்ய வைத்ததோடு, தனது 3-வது ஓவரில் பிளெட்சர் (2), சாமுவேல்ஸ் (4) ஆகியோரை வெளியேற்ற மே.இ.தீவுகள் 16/3 என்று ஆனது. மற்றொரு இடது கை ஸ்பின்னர் மொகமது நவாஸ், ஜான்சன் சார்லஸை பவுல்டு செய்தார். அறிமுக வீரர் பூரன் 5 ரன்களில் வெளியேற மே.இ.தீவுகள் படுமோசமாக 22/5 என்று ஆனது.

கெய்ரன் பொலார்ட் 17 பந்துகளில் பவுண்டரி அடிக்க முடியாமல் 9 ரன்கள் எடுத்து இமாத் வாசிமிடம் பவுல்டு ஆனார். அதே ஓவரில் பிராத்வெய்ட் ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் ஆட்டமிழந்தார். இமாத் வாசிம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 47/7 என்று மிகவும் கேவலமாகப் போய்விடும் தருணத்தில் மேலும் அதிர்ச்சிகரமாக சுனில் நரைன் 1 ரன்னில் ரன் அவுட் ஆக 48/8 என்று ஆனது.

ஆனால் அதன் பிறகு டிவைன் பிராவோ, ஜெரோம் டெய்லர் இணைந்து 8 ஓவர்களில் 66 ரன்களைச் சேர்த்தனர். 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் டெய்லர் 21 ரன்களில் சோஹைல் தன்வீர் பந்தில் பவுல்டு ஆனார். டிவைன் பிராவோ 54 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுக்க 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, மே.இ.தீவுகள்.

பாகிஸ்தான் இலக்கைத் துரத்திய போது 18 பந்துகளில் 3 பவுண்ட்ரி 1 சிக்சருடன் ஷர்ஜீல் கான் 22 ரன்கள் எடுத்து பத்ரியிடம் அவுட் ஆனார். காலித் லடீப் 34 ரன்களையும் பாபர் ஆசம் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 55 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 116 ரன்களுக்கு 1 விக்கெட்டுடன் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இமாத் வாசிம் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x