Published : 16 Feb 2017 06:23 PM
Last Updated : 16 Feb 2017 06:23 PM
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் போன்று தனது கேப்டன்சியில் பேட்டிங் திறனை அடுத்த கட்டத்துக்கு செல்வேன் என்ற நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஜோ ரூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அலாஸ்டர் குக் கடந்த வாரம் விலகினார். இதையடுத்து புதிய கேப்டனாக சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர வீரரான ஜோ ரூட் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான், கேப்டன் பொறுப்பு ஜோ ரூட்டின் பேட்டிங்கை திறனை வெகுவாக பாதிக்கும் என கருத்து தெரிவித்தார். 26 வயதான ஜோ ரூட் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,594 ரன்களை 52.80 சராசரியுடன் சேர்த்துள்ளார்.
அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் சராசரி 67 ஆக உள்ளது. அவரது தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது.
கோலி கேப்டனாக பொறுப்பேதற்கு முன்பு தரவரிசையில் 41-வது இடத்திலேயே இருந்தார். ஆனால் அதன் பின்னர் பேட்டிங்கில் அசுர வளர்ச்சி கண்ட அவர் தரவரிசையில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.
இதேபால் ஆஸ்திரேலிய கேப்டனாக உள்ள ஸ்டீவ் ஸ்மித்தின் வளர்ச்சியும் அபாரமாக உள்ளது. 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவரது ரன்குவிப்பு சராசரி 60.15 ஆக உள்ளது.
இதுதொடர்பாக ஜோ ரூட் கூறும்போது, "விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பெரிய அளவில் சிறந்த திறனை வெளிப்படுத்தி தங்களது பேட்டிங்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கின்றனர். இதேபோன்று என்னாலும் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொறுப்புடனும், மேலும் சிறப்பாக செயல்படவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கேப்டன் பதவியானது உண்மையிலேயே என்னை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறப்பாக செயல்பட தூண்டும் விதமாகவும் அமையும். இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக வேண்டும் என எல்லோருக்குமே கனவு இருக்கும். இதில் நிச்சயம் என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.
இவ்வாறு ஜோ ரூட் கூறினார்.
ஜோ ரூட்டுக்கு அடுத்த 18 மாதங்கள் கடினமான சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது. வரும் ஜூலையில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியையும் அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதையடுத்து நவம்பர் மாதம் ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT