Published : 22 Jul 2016 10:35 AM
Last Updated : 22 Jul 2016 10:35 AM

தொடரும் விராட் கோலியின் சதங்கள்: இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள்

ரிச்சர்ட்ஸ் பெயர் கொண்ட மைதானத்தில் அவருடன் ஒப்பிடப்படப்பட்டு வரும் விராட் கோலி டெஸ்ட் முதல்நாளில் சதம் அடித்தார். இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

கோலியின் 12-வது டெஸ்ட் சதமாகும் இது.

விராட் கோலி 197 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார், மறு முனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 22 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். சஹாவுக்கு முன்பாக அஸ்வின் களமிறக்கப்பட்டுள்ளது தீர்மானமான முடிவே தவிர சஹாவைப் பாதுகாக்கும் இரவுக்காவலனாக அஸ்வின் இறங்கவில்லை என்பது தெளிவு.

பிஷூவுக்கு ‘அளித்த’ விக்கெட்டுகள்:

மே.இ.தீவுகள் அணியின் லெக் ஸ்பின்னர் பிஷூவுக்கு 3 விக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது என்றே கூற வேண்டும். அதுவும் புஜாராவும், ரஹானேவும் ஆட்டமிழந்தது மிக மோசமான பந்துகளில். குறிப்பாக ரஹானே ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமே. பிஷூ தன் காலின் கீழேயே ஒரு பந்தைப் பிட்ச் செய்ய அது ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்றது. ஏற்கெனவே புல்ஷாட்டுக்கு தயாராகி விட்ட ரஹானே பந்தை மந்தமாக ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இதனால் நேராக மிட்விக்கெட்டில் மே.இ.தீவுகளே எதிர்பாராத வகையில் கேட்சிங் பிராக்டீசை விடவும் மிக எளிதான கேட்ச் ஆனது.

ரஹானே அவுட்டின் பின்னணியில் ஒரு முக்கியமான நுட்பம் உள்ளது. பிஷூ வீசிய அந்த ஓவரில் விராட் கோலி தனது சதத்திற்கு அருகில் இருந்தார், இந்நிலையில் தனது டிரேட்மார்க் கவர் டிரைவ் ஒன்றை கோலி அபாரமாக அடிக்க, அது கவர் திசை பீல்டரால் பாய்ந்து தடுக்கப்பட்டது, ஆனால் பந்து அவரத் கையிலிருந்து சிறிது தூரம் சென்றதால் கோலி ஒரு ரன் எடுத்தார். பேட்டிங் முனைக்கு வந்த ரஹானே, கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்க வேண்டிய மட்டமான பந்தை சிங்கிளுக்காக ஆடப்போக துரதிர்ஷ்டவசமாக கேட்ச் ஆனது. ரஹானே 4 அற்புதமான பவுண்டரிகளுடன் 22 ரன்களை எடுத்து அச்சுறுத்தும் இன்னிங்ஸிற்காக அச்சாரம் போட்ட நிலையில் அவரது விக்கெட் மே.இ.தீவுகளுக்கு அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். கிரிக்கெட்டில் சில வேளைகளில் இப்படி நடப்பதுண்டு. அந்த முதல் பந்தில் கோலி அடித்த கவர் டிரைவ் வழக்கம் போல் பவுண்டரி சென்றிருந்தால் ரஹானே பேட்டிங் முனைக்கு வந்திருக்க மாட்டார், விக்கெட்டும் விழுந்திருக்காது.

கப்ரியேலின் தொடக்க வேகம்:

புதிய பந்தில் கப்ரியேல் அபாரமாக வீசினார், அவரது எகிறு பந்துகள் ஷிகர் தவணை பாடாய்ப்படுத்தியது, பின்னால் செல்வதா முன்னால் காலைப் போட்டு ஆடுவதா என்பதில் தவணுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டது. இதனால் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்துகளையும் ஷார்ட் பிட்ச் பயத்தில் பின்னாலிலிருந்தே ஆட இன்சைடு எட்ஜுகளும் எடுத்தது. கப்ரியேலின் சில எகிறு பந்துகள் தவணின் மட்டையில் பட்டு பீல்டர்கள் இல்லாத பகுதியிலோ அல்லது பீல்டருக்கு வெகு முன்னதாகவோ விழுந்தது.

ஆனால் இந்த தொடக்க தடுமாற்றத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தவண், உறுதியாக நின்றார். மேற்கிந்திய அணியின் மற்ற வீச்சாளர்களும் கட்டுக்கோப்புடன் வீசிய பகுதியாகும் இது, ஆனால் தவண் நிற்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த எகிறு பந்து ஸ்பெல்லில்தான் தவண் ஆட்டமிழக்க வேண்டிய சூழ்நிலைகளைத் தாண்டி விஜய்க்கு ஒரு அருமையான ஆஃப் ஸ்டம்ப் எகிறு பந்து விழுந்தது. விஜய் மட்டையை உயர்த்த பந்து எட்ஜ் ஆகி கிரெய்க் பிராத்வெய்ட்டின் தட்டித்தட்டிப் பிடித்த கேட்சில் விஜய் 7 ரன்களில் வெளியேறினார்.

ஷிகர் தவண் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அதீத கவனம் செலுத்தி ஆடினார். புதிய பந்து கொஞ்சம் தேய்ந்தவுடன் தவண் நிறைய கட் ஷார்ட்களை ஆடினார். கவர் டிரைவ்களை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டார். உணவு இடைவேளையின் போது தவண் 46 ரன்களில் இருந்தார். இந்தியா 72/1 என்று இருந்தது, புஜாரா 14 ரன்கள் எடுத்திருந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரன் குவிப்பு வழிமுறைகளை தவண் அதிகப்படுத்திக் கொண்டார். லேட் கட்களை ஆடினார், ஸ்பின்னர்களை மேலேறி வந்து ஆடினா, ஆனால் புஜாரா 67 பந்துகளில் 16 ரன்கள் என்று தேங்கிப் போனார். கடைசியில் பிஷூவின் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தை ஏதோ லெக் திசையில் சுழற்றி பந்து விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. அவருக்கே ஒன்றும் புரியவில்லை. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை எப்படி இந்தப் பந்தில் ஆட்டமிழந்திருக்க முடியும் என்பது.

கோலியின் ‘ராஜ’ கவர் டிரைவ்கள்:

புஜாரா இருக்கும் வரையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி சில எளிதான டாட்பால்களை பெற்ற மே.இ.தீவுகள், கோலி இறங்கி அவற்றையெல்லாம் கவர் திசையில் பவுண்டரிகளாகவோ அல்லது ரன்களாகவோ மாற்றத் தொடங்கியவுடன் மே.இ.தீவுகள் வாசல் அடைக்கப்பட்டது. முதல் பவுண்டரி மர்லான் சாமுவேல்ஸின் மிஸ்பீல்டில் வந்தது கோலிக்கு. கோலி ஆடத் தொடங்கியவுடன் தவண் புகுந்தார், கப்ரியேலை ஒரு அப்பர் கட் சிக்ஸ், பிஷூவை சக்திவாய்ந்த ஸ்வீப் பவுண்டரி என்று தன்னை திறந்து கொண்டார்.

கோலி ஒருமுனையில் டிரைவின் கிங்குடா என்று ஆடிக்கொண்டே இருந்தார், அனைத்து கவர் டிரைவ்களும் ஒரு முழுவீச்சு டிரைவ்கள் என்பதை விட புஷ்-டிரைவ் என்றே கூற வேண்டும், மறைந்த ஹாக்கி மேதை மொகமது ஷாகித்தின் ஹாக்கி ரக ஆஃப் சைடு பிளிக் என்றே கோலியின் கவர் டிரைவ்களை கூற முடியும். பிஷூ வீசிய மோசமன பந்துகளை மிட்விகெட்டில் விளாசினார் கோலி, சச்சின் போலவே அவரது குட் லெந்த் லெக்ஸ்பின் பந்துகளை ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த் திசையில் மிட்விக்கெட், மிட் ஆனில் அடித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

கோலி 75 பந்துகளில் தன் அரைசதத்தைக் கொண்டு வர, தவண் ஏற்கெனவே சதம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார், இருவரும் இணைந்து 105 ரன்களை 27 ஓவர்களில் சேர்த்த போது, தேநீர் இடைவேளைக்கு சற்று முன் பிஷூவை ஒரு ஸ்வீப் பவுண்டரி அடித்த தவண் அதே ஷாட்டை ரிபீட் செய்த போது கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆகி 147 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 84 ரன்களில் வெளியேறினார்.

ரஹானே இறங்கி 22 ரன்களை வெகு சுலபமாக எடுத்தார், கோலியுடன் இணைந்து 57 ரன்கள் கூட்டணி அமைத்தார், ஆனால் அந்த பிஷூவின் மோசமான பந்து ஷார்ட் பிட்ச் ஆகி பிட்சில் நின்று வந்தது, ரஹனேவும் சிங்கிள் எடுத்து கோலியின் சதத்திற்கு ஸ்ட்ரைக் கொடுக்க முயன்றதால் கேட்ச் ஆனது, முதல் பந்து கோலியின் ராஜ கவர் டிரைவ் ஒரு ரன்னாக இல்லாமல் இருந்திருந்தால் ரஹானே ஆட்டமிழந்திருக்க மாட்டார்.

கோலி 134 பந்துகளில் சதம் கண்டார். ரஹானே அவுட் ஆனவுடன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சிலும் கேப்டன்சியிலும் தீவிரமில்லை, இந்திய அணியை கட்டுப்படுத்தவே விரும்புகின்றனரே தவிர அட்டாக் இல்லை. இதனால் அஸ்வினும் கோலியும் மேலும் 66 ரன்களைச் சேர்த்தனர்.

கோலி 143 ரன்களில் களத்தில் இருப்பது மே.இ.தீவுகளுக்கு பெரிய அபாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x