Published : 27 Jul 2016 06:19 PM
Last Updated : 27 Jul 2016 06:19 PM
பல்லெகிலே மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்குச் சுருண்டது.
இலங்கை முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு நேற்று ஆட்டமிழக்க 66/2 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று இடது கை விரல் ஸ்பின்னர் ரங்கனா ஹெராத், மற்றும் அறிமுக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் லக்ஷண் சந்தகன் அகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 79.2 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் இலங்கை தன் 2-வது இன்னிங்சில் குசல் பெரேரா விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் லெந்த் பந்துக்கு எல்.பி.முறையில் இழந்து 6 ரன்கள் எடுத்துள்ளது.
உஸ்மான் கவாஜா 25 ரன்களுடனும், ஸ்மித் 28 ரன்களுடனும் 2-ம் நாளில் தொடங்கினர். ஆனால் 30 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்மித் மிகவும் முன்னதாகவே தாக்குதல் ஆட்டத்தை ஆட முயற்சி செய்தார், ரங்கனா ஹெராத் நன்றாக பிளைட் செய்த பந்தை இறங்கி வந்து ஆட முயன்று ஸ்டம்ப்டு ஆனார்.
அடுத்த பந்தே வோஜஸ் காலியாகியிருப்பார். ஹெராத் பந்தை முன்னால் நன்றாகக் காலைத் தூக்கிப் போட்டு ஆட நினைக்க பந்து மட்டையின் உள்விளிம்பைக் கடந்து பேடைத் தாக்கியது. கடுமையான முறையீட்டை நடுவர் மறுத்தார். மேத்யூஸ் ரிவியூ செய்தார், ஆனால் லெக் ஸ்டம்பின் வெளிப்பகுதியை தாக்குவதாக ரீப்ளே காட்ட நடுவர் நாட் அவுட் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது, தப்பினார் வோஜஸ்.
உஸ்மான் கவாஜா 26 ரன்களில் ஹெராத்தின் பந்தில் எல்.பி.ஆனார். பந்தை வேகமாக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியேயிருந்து உள்ளே கொண்டு வந்தார் ஹெராத் பின்னால் நின்று ஆட முடிவெடுத்த கவாஜா கிளீனாக எல்.பி.ஆகி வெளியேறினார்.
மிட்செல் மார்ஷ், பிரதீப் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் எண்ணிக்கையைத் தொடங்கினார். பிறகு ஹெராத்தை பின்னால் சென்று கவரில் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு பிரதீப்பையும் அதே இடத்தில் ஒரு பவுண்டரி விளாசி தாக்குதல் முறையை கடைபிடித்தார். 70/4 என்ற நிலையிலிருந்து மார்ஷ், வோஜஸ் கூட்டணி ஸ்கோரை 130 ரன்களுக்கு உயர்த்தினர். 97 பந்துகளில் அரைசதக் கூட்டணி அமைத்தனர். தில்ருவன் பெரேராவை மார்ஷ் ஒரு கவர் திசையில் விளாச ஆஸ்திரேலியா இலங்கை ஸ்கோரை கடந்தது.
இந்நிலையில்தான் அறிமுக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் ஒரு பந்தை ராங் ஒன்னாக வீச மார்ஷ் 31 ரன்களில் பவுல்டு ஆனார். அருமையான பந்தில் டெஸ்ட் முதல் விக்கெட்டை வீழ்த்தியதை அவர் வெகுவாகக் கொண்டாடினார்.
விக்கெட் கீப்பர் நெவில், ஹெராத்தை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். உணவு இடைவேளைக்குப் பிறகு மிட்செல் ஸ்டார்க், ஓ’கீஃப் ஆகியோரையும் சந்தகன் வீழ்த்தினார். நேதன் லயன் ஸ்வீப் ஷாட்டில் பீட் ஆகி சந்தகனிடம் எல்.பி. ஆக மீண்டும் அதிக பட்ச தனி ஸ்கோரை எட்டிய ஆடம் வோஜஸ் 115 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 7வது விக்கெட்டாக பிரதீப்பிடம் அவுட் ஆனார். 146/6 என்ற நிலையிலிருந்து ஓ’கீஃப் 23 ரன்களையும், ஸ்டார்க் 11 ரன்களையும், லயன் 17 ரன்களையும் எடுத்துப் பங்களிப்புச் செய்ய இந்தப் பிட்சில் 150 ரன்களூக்குச் சமமான 86 ரன்கள் முன்னிலையை ஆஸ்திரேலியா பெற முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT