Published : 02 Mar 2014 07:45 PM
Last Updated : 02 Mar 2014 07:45 PM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள்.
மேற்கிந்தியத் தீவுகளின் நார்த் சவுன்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டுவைன் பிராவோ 91 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்தார். டேரன் சமி 36 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61, சிம்மன்ஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் மைக்கேல் லம்ப் சதமடித்தபோதும் (106 ரன்கள்), மற்ற வீரர்கள் சொதப்பினர். 37-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து, பின்னர் சரிவுக்குள்ளாகி தோல்வி கண்டது. இதனால் அந்த அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது மே.இ.தீவுகள். 2-வது போட்டி நார்த் சவுன்டில் இன்று நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT