Published : 23 Sep 2016 04:44 PM
Last Updated : 23 Sep 2016 04:44 PM

வில்லியம்சன், லாதம் அபாரம்: மழையால் நிறுத்தப்பட்ட 2-ம் நாள் ஆட்டத்தில் நியூஸி. 152/1

கான்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக தேநீர் இடைவேளைக்குப் பிறகு கைவிடப்பட்டது. நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் கேன் வில்லியம்சன் 65 ரன்களுடனும், தொடக்க இடது கை வீரர் டாம் லாதம் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று இன்னமும் 34 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தேநீர் இடைவேளையின் போது கனமழை பெய்ததால் மைதானம் விளையாட ஏற்றதாக இல்லை என்று முடிக்கப்பட்டது. நாளை 3-ம் நாள் ஆட்டம் 9.15-க்கு தொடங்குகிறது, இதனால் 98 ஓவர்களை நாளை வீச முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜடேஜா, உமேஷ் யாதவ் மேலும் 27 ரன்களைச் சேர்த்தனர். ஜடேஜா 2 பவுண்டரிகளையும் சாண்ட்னர் பந்தில் லாங் ஆனில் ஒரு அபார சிக்சரையும் அடித்து 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். உமேஷ் யாதவ் 9 ரன்கள் எடுத்து வாக்னர் பந்தை எட்ஜ் செய்து அவுட் ஆக இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில் 21 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு அவுட் ஆஃப் பார்மிலும் சுமாராக ஆடிவந்தார், ஆனால் உமேஷ் யாதவ் அவரை இன்ஸ்விங்கரில் ஒர்க்-அவுட் செய்து எல்.பி. செய்தார். 35/1 என்ற நிலையில் கேன் வில்லியம்சன், டாம் லாதம் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர்.

ஜடேஜா, அஸ்வினின் சுழலையும் கோலியின் ஆக்ரோஷமான கள வியூகத்தையும் கேன் வில்லியம்சன், டாம் லாதம் அபாரமாக விளையாடினர். இருவரும் அரைசதம் நெருங்கிய தருணத்தில்தான் அஸ்வின் இந்தப் பிட்சில் எந்த வேகத்தில் வீச வேண்டும் என்பதை கண்டுபிடித்துக் கொண்டாற்போல் தெரிந்தது.

ஏனெனில் இன்னும் மெதுவாக தூக்கி வீசினார் அஸ்வின் இதனால் லெந்தில் பிட்ச் ஆன பந்து அசவுகரியமாக பவுன்ஸ் ஆகி கேன் வில்லியம்சனின் ஹெல்மெட்டில் பட்டது. முரளி விஜய்யும் வீசினார், நன்றாக திரும்பிய ஆஃப் பிரேக்கில் டாம் லாதம் மட்டையைக் கடந்து சென்றது பந்து. ஒரு பந்து புல் லெந்தில் பேடை தாக்க எல்.பி.முறையீடு நிராகரிக்கப்பட்டது.

அடுத்த ஓவரில் அஸ்வினுக்கும் ஒரு எல்.பி. முறையீடு நிராகரிக்கப்பட்டது. இம்முறை வில்லியம்ன்சன் நன்றாகத் திரும்பிய பந்தை பின்னங்காலில் சென்று ஆடி கால்காப்பில் வாங்கினார், பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆனது என்று நடுவரால் நாட் அவுட் என்று நிராகரிக்கப்பட்டது.

லாதமுக்கு ராகுல் பிடித்த கேட்ச் ஏன் நாட் அவுட்?

டாம் லாதம் 47-ல் இருந்த போது இன்னிங்சின் 37வது ஓவரை ஜடேஜா வீசினார். லாதம் ஜடேஜா பந்தை ஸ்வீப் செய்தார். பந்து ராகுலிடம் கேட்ச் ஆனது, ராகுல் அதனை தட்டித்தட்டி பிடித்தார். ஆனால் நடுவர் பந்து தரையில் பட்டதோ என்ற ஐயத்தில் விசாரித்தார், முறையீடு 3-வது நடுவரிடம் சென்றது, என்ன நடந்தது? நேரடியாக அவுட்தானே என்று எல்லோரும் நினைக்கும் நேரத்தில், பந்து தரையில் பட்டுச் சென்றதா என்று கோரிய வீடியோ ரிப்ளேயில் வேறொன்று தெரியவந்தது, ராகுல் தட்டித் தட்டி பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக பந்து அவரது ஹெல்மெட் ஸ்ட்ராப்பில் பட்டு கேட்ச் ஆகியுள்ளது. இது விதிமுறை 32.3-க்கு புறம்பானது. இதன் படி கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக பீல்டரின் ஹெல்மெட்டையோ அதன் பகுதியையோ பந்து தொட்டிருக்கக் கூடாது. ஆகவே டாம் லாதம் நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நேரடியான கேட்சை சொதப்பியவர் ராகுல். முன்னதாக காலையில் ராகுல் ஒரு மிஸ்பீல்டையும் செய்து அதற்காக வருந்தினார்.

தேநீர் இடைவேளைக்கு முன்னர், வில்லியம்சன் ஜடேஜா பந்தை எட்ஜ் செய்ததாக பெரிய முறையீடு எழுந்தது. அவர் கட் செய்ய முயன்ற போது மட்டையின் அடிவிளிம்பில் பட்டு சென்றது என்பது ஜடேஜா மற்றும் இந்திய அணியினரின் துணிபு. ஆனால் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு வழங்கப்பட வில்லியம்சன் தப்பினார்.

மற்றபடி டாம் லாதம், கேன் வில்லியம்சன் பேட்டிங்கிலும், ஸ்பின்பந்து வீச்சை எதிர்கொண்ட விதத்திலும் எந்த வித தவறையும் காண முடியாது ஸ்ட்ரைக்கை அருமையாக ரொடேட் செய்தனர். அஸ்வினை 2 ரன்களுக்கு கவர் திசையில் தட்டிவிட்டு டாம் லாதம் தனது 8-வது டெஸ்ட் அரைசதத்தை எடுக்க, ஜடேஜா பந்தில் தனது 23-வது டெஸ்ட் அரைசதத்தை எடுத்தார் வில்லியம்சன். இருவரும் இணைந்து இதுவரை 2-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர்.

நேற்று இந்தியாவும் 150/1 என்ற நிலையிலிருந்துதான் சரிவு கண்டது, அதே போல் நியூஸிலாந்து அணி சரிவிக்கப்படுமா என்பதை நாளை பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x