Published : 11 Nov 2014 05:05 PM
Last Updated : 11 Nov 2014 05:05 PM

தோனியிலிருந்து வேறுபட்டவர் என்பதை காண்பிக்க கோலிக்கு வாய்ப்பு: திராவிட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகச் செயல்படவுள்ள விராட் கோலிக்கு, தோனியை விட தான் வேறுபட்டவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் திராவிட் கூறும்போது, “தோனி இல்லாததால் விராட் கோலி தன் கேப்டன்சி தோனியின் பாணியிலிருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி நிச்சயம் இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்றே நான் கருதுகிறேன்.

ஒருநாள் கிரிக்கெட், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரை சற்றுக் குறைவான சந்தர்பங்களில் பார்த்தாலும், அவருக்கு நல்ல கிரிக்கெட் அறிவு இருப்பது என்பதில் ஐயமில்லை. அவர் களத்தில் சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புபவர். தோனியிடமிருந்தும் கற்றுக் கொண்டிருப்பார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்டிங் மட்டும் சீரான முறையில் சிறப்பாக அமைந்து விட்டால், தோனிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிற்கு கோலி மிகத் தகுதியானவர் என்றே நான் கருதுகிறேன்.

மேலும், தனது இன்னிங்ஸ், பேட்டிங் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் கேப்டன்சி பற்றியும் அவர் யோசிப்பது அவருக்கு நன்மை செய்யும். ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் அவர் சதம் எடுத்துள்ளார். இப்போதுள்ள மிடில் ஆர்டரில் அவருக்கு அனுபவம் உள்ளது” என்றார்.

அதே போல் புதிய வீரர்களைத் தேர்வு செய்தால் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து விளையாடும் 11 வீரர்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். "புதிய வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்கள் ஏற்கெனவே அணியில் இருக்கும் வீரர்களுக்கு சிறந்த மாற்றே என்று நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். (உதாரணம்: கரண் சர்மா, லோகேஷ் ராகுல்).

சுரேஷ் ரெய்னா ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் சென்று ஆடியுள்ளார். அதனால் உலகக் கோப்பைக்கு முன் அவருக்கு அனுபவம் இருக்கட்டும் என்று தேர்வு செய்யப்படுவதாக நினைப்பது தவறு. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தன்னை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் அவர் நல்ல பீல்டர். இங்கிலாந்தில் அந்த இடத்தில்தான் நாம் கோட்டைவிட்டோம். ரெய்னா அணிக்கு புத்துணர்ச்சி அளிப்பவர். வாய்ப்பளிக்கலாம் தவறில்லை” என்கிறார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x