Published : 05 Dec 2013 08:40 PM
Last Updated : 05 Dec 2013 08:40 PM
ஜோகன்னஸ்பர்கில் நடந்து வரும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவிற்கு, தென் ஆப்பிரிக்கா 359 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த அணியின் ஆம்லா, காக், டீவில்லிர்ஸ், டுமினி என அனைவரும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலு சேர்த்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை பேட்டிங்க் செய்ய பணித்தது. துவக்க ஆட்டக்காரர்களான ஆம்லா மற்றும் காக் பொறுப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் அரை சதத்தை கடந்தனர். இந்த ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 152 ரன்கள் குவித்திருந்தபோது ஷமி பந்தில், ஆம்லா போல்டானார். பின்னர் வந்த காலிஸும் 10 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய குவிண்டன் டி காக், 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் சதத்தைக் கடந்தார். மறுமுனையில் ஆடிய கேப்டன் டீவில்லிர்ஸும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்திய கேப்டன் தோனி, ஆட்டத்தின் 41வது ஓவரை வீச, கோலியை அழைத்தார். 4வது பந்தில் சிக்ஸர் கொடுத்த கோலி, அடுத்த பந்திலேயே சதமடித்த டி காக்கை அவுட்டாக்கினார்.
அடுத்து வந்த டுமினி, கேப்டனுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இருவரும் இணைந்து பவுண்டரிகள் சிக்ஸர்கள் என விளாசித் தள்ளினர். இந்த ஜோடியினால், கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 135 ரன்கள், அந்த அணிக்குச் சேர்ந்தது. மோஹித் சர்மா வீசிய 49வது ஓவரில், மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 23 ரன்களை இவர்கள் எடுத்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரில், கேப்டன் டீவில்லிர்ஸ் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார்.
அடுத்த இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் வந்தது. இதனால், 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 358 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா, இந்தியாவிற்க்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜோகன்னஸ்பர்க் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சிறந்த களமாக இருக்கும். ஸ்டெயின், மார்கல், பார்னேல் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக, இந்தியாவின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment