Published : 11 Oct 2015 01:17 PM
Last Updated : 11 Oct 2015 01:17 PM
கான்பூரில் இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி டிவில்லியர்ஸின் அற்புதமான விளாசல் சதத்துடன் 50 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.
ஏ.பி.டிவில்லியர்ஸ், ஃபர்ஹான் பெஹார்டீன் ஜோடி கடைசி 4.5 ஓவர்களில் 65 ரன்களை விளாசித் தள்ளினர், பின்னி, புவனேஷ், உமேஷ் யாதவ் ஆகியோர் மிக மோசமாக கடைசி ஓவர்களை வீசினர். யார்க்கர் வீசும் முயற்சியில் புல்டாஸ்களை வாரி வழங்கினர். மற்ற பந்து வீச்சு முறைகள் எதுவும் இவர்களுக்குக் கைகூட வில்லை.
இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு அஸ்வின் 4.4 ஓவர்களே வீச முடிந்ததுதான், அவர் காயம் காரணமாக வீச முடியவில்லை. அவரும் முதல் ஓவரிலேயே டி காக்கை வீழ்த்தினார். ஒரு ஓவருக்குப் பிறகு அஸ்வினை தோனி கட் செய்தார். அப்போது ஏன் என்று விளங்கவில்லை, பிறகுதான் அவர் மைதானத்துக்கு வெளியே போவதும் வருவதுமாக இருந்தார், பிறகுதான் அவருக்குக் காயம் என்று தெரியவந்தது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது.
ஆனாலும் 23.2 ஓவர்களில் 104/2 என்று தென் ஆப்பிரிக்கா சற்றே ரன் எடுக்க முடியாமல் தவித்து வந்தது. அந்த நிலையில் அஸ்வின் இருந்து 2 விக்கெட்டுகளைக் குறிப்பாக டிவில்லியர்ஸை சாய்த்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஆனால்... டிவில்லியர்ஸை நிற்க விட்டால் என்ன நடக்குமோ அது நன்றாகவே நடந்தது.
புவனேஷ் குமார், ஸ்டூவர்ட் பின்னியையெல்லாம் தோனி எந்த தைரியத்தில் டிவில்லியர்ஸுக்கு எதிராக வீச அழைக்கிறார் என்பது புரியவில்லை. விளாசலைத் தொடக்கி வைத்தவர் ஸ்டூவர்ட் பின்னி. 45-வது ஓவரை அவர் வீச, ஆமை வேகப்பந்து புல் லெந்தாக விழ டுமினி ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்தார். பிறகு 1 ரன் எடுத்து டிவில்லியர்ஸ் கையில் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க, டிவில்லியர்ஸுக்கு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார் பந்து பவுண்டரிக்கு பறந்தது. மீண்டும் ஒரு ஃபுல் பந்தை லெக் அண்ட் மிடிலில் வீச சற்றே ஒதுங்கிக் கொண்டு அலட்சியமாக லாங் ஆனில் சிக்சர் அடித்தார் டிவில்லியர்ஸ். அடுத்த பந்தை மேலும் அலட்சியமாக மேலேறி வந்து ஒரே அடி எக்ஸ்ட்ரா கவரில் பந்து கிழித்துக் கொண்டு சென்றது. 21 ரன்கள் அந்த ஓவரில். இதுதான் தொடக்கம்.
46-வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து ஆடிவந்த அபாய வீரர் டுமினியை மிகவும் வைடாக ஒரு பந்தை வீசி வீழ்த்தினார் உமேஷ் யாதவ், அது விக்கெட் பந்தேயல்ல, வைடு பந்து, அதனை துரத்தி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டுமினி. 46-வது ஓவர் முடிவில் 241/5 என்றே இருந்தது தென் ஆப்பிரிக்கா.
அதன் பிறகு நடந்தது உரியடி சாத்துமுறை. 47-வது ஓவரில் குமார் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கொடுத்தார். 48-வது ஓவரை உமேஷ் வீச, அழகாக பேட்ஸ்மெனுக்கு வாகாக இன்ஸ்விங்கர், புல் லெந்தில் வீசப்பட பெஹார்டீன் 2 பவுண்டரிகளை விளாசினார். பிறகு புல்டாஸை டிவில்லியர்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார்.
49-வது ஓவரில் புவனேஷ் குமாரின் பூப்பந்து வீச்சுக்கு டிவில்லியர்ஸ் அடிகொடுத்தார். யார்க்கர் தவற, ஃபுல்டாஸ் பவுலர் தலைக்கு மேல் சிக்சர். பிறகும் வேகமற்ற ஒரு ஃபுல் லெந்த் பந்து லாங் ஆனில் ரெய்னா தலைக்கு மேல் ஒரு சிக்சர். மீண்டும் புல்டாஸ் 2 ரன்கள், பிறகும் ஒரு புல்டாஸ் இம்முறை பவுண்டரி. 19 ரன்கள் வந்தது.
50-வது ஓவரை வீச உமேஷ் வந்தார். டிவில்லியர்ஸ் 98 ரன்களில் இருந்தாலும், பெஹார்டீன் மீண்டும் புல் லெந்த், புல்டாசில் 2 பவுண்டரிகள் மற்றும் ஸ்லோ பந்தை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். 4-வது பந்துதான் சிங்கிள் எடுத்தார். 5-வது பந்து டிவில்லியர்ஸ் சுழற்ற சிக்கவில்லை. ஆனால் கடைசி பந்து மீண்டும் ஒன்றுமில்லாத வெற்றுப் பந்தாக அமைய லாங் ஆனில் சிக்ஸ், டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் சதம் கண்டார். அணியும் 300 ரன்களைக் கடந்தது. பெஹார்டீன் 19 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட், டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 நாட் அவுட்.கான்பூரில் 300 ரன்களைக் கடந்த முதல் அணியானது தென் ஆப்பிரிக்கா.
முன்னதாக டி காக் 29 ரன்களில் அஸ்வினிடம் வீழ்ந்தார். ஹஷிம் ஆம்லா 37 ரன்கள் எடுத்து மிஸ்ராவின் அபாரமான பந்தில் பவுல்டு ஆனார். டுபிளேசிஸ் 77 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ்விடம் எல்.பி.ஆனார். பிறகு அபாய வீரர் மில்லர் 13 ரன்களில் மிஸ்ராவை மேலேறி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆனார்.
மிஸ்ரா இன்று அருமையாக வீசினார். அவர் 10 ஓவர்கள் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் 71 ரன்கள் 2 விக்கெட். புவனேஷ் குமார் கடைசி 5 ஒவர்களில் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்து 67 ரன்கள் விக்கெட் இல்லை. ஸ்டூவர்ட் பின்னி 8 ஓவர்களில் 63 ரன்கள். இடையில் அஸ்வின் வீச முடியாத காரணமாக ரெய்னா 7 ஓவர்களை வீசி 37 ரன்களை விட்டுக் கொடுத்தார், கட்டுப்படுத்தினார், ஆனால் விக்கெட்டுகள் எடுக்க வேண்டிய கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஒன்று, இரண்டு என்று ஸ்கோரை நகர்த்தி தனது விக்கெட்டைப் பாதுகாத்து பிற்பாடு விளாசினார்.
24-வது ஓவரில் இறங்கிய டிவில்லியர்ஸ் 35-வது ஓவரில்தான் முதல் பவுண்டரி அடித்தார், அது ரெய்னாவை அடித்த சிக்சராக அமைந்தது. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த டிவில்லியர்ஸ், கடைசி 39 பந்துகளில் 77 ரன்களை விளாசித் தள்ளினார். மொத்தத்தில் அருமையாக கட்டமைத்த ஒரு இன்னிங்ஸ் ஆகும் இது.
மிகவும் கடினமான துரத்தலை இந்தியா செய்து முடிக்குமா என்பதப் பார்க்க வேண்டும், தென்னாப்பிரிக்காவிடம் அவர்கள் 300 ரன்களுக்கும் மேல் குவித்த பிறகு எதிரணியினர் வென்ற தருணங்கள் மிக மிக அரிதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT