Published : 29 Jan 2017 06:33 PM
Last Updated : 29 Jan 2017 06:33 PM

நடாலை வீழ்த்தி 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரோஜர் பெடரர் சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடாலை 5 செட்களில் வீழ்த்தி ரோஜர் பெடரர் தனது 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பானிய வீரர் ரபேல் நடாலை 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற 5 செட்களில் சுவிஸ். வீரர் ரோஜர் பெடரர் வீழ்த்தி தனது 18-வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

இதுவரை முக்கிய டென்னிஸ் தொடர்களில் ரபேல் நடால், பெடரர் மீது கொண்டிருந்த ஆதிக்கத்தை இன்று பெடரர் தனது அபார ஆட்டத்தினால் முறியடித்தார்.

இந்த ஆட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் 5 செட்கள் ஆடப்பட்டும் ஒரு செட் கூட டை பிரேக்கருக்குச் செல்லவில்லை, மேலும் 4 மணி நேரத்துக்குள் ஆட்டம் முடிந்துள்ளது, பொதுவாக இருமேதைகள் மோதும்போது இப்படித்தான் ஆட்டம் விரைவில் முடியும். ஏனெனில் பெடரர், நடால் இருவருமே முக்கிய, நெருக்கடி தருணங்களாக இருந்த போதும் தங்களது ஆக்ரோஷ ஆட்டத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் ‘ரிஸ்க்’ எடுத்து ஆடுவதிலேயே கவனம் செலுத்தினர்.

கைக்கு நேராக ராலிகளை அடித்து ஒருவர் மற்றவர் தவறுக்காக காத்திருப்பு ஆட்டம் ஆடும் சமரசம் செய்து கொள்ளவில்லை, இதுதான் உண்மையில் உயர்தரமான ஒரு டென்னிஸ் ஆட்டமாகும், இதுதான் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த போட்டியாகும். பெடரரின் 100-வது ஆஸ்திரேலிய ஓபன் போட்டியாகும் இது, இதுவே இறுதிப்போட்டியாகவும் அமைந்து அதில் வெற்றியும் பெற்று 18-வது கிராண்ட்ஸ்லாம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளமை பெடரரின் அதி திறமைக்கும், குன்றாத அவரது டென்னிஸ் ஆட்டத்தின் சிறப்புக்கும் எடுத்துக் காட்டாகும்.

இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடினர், அதுவும் செட்டோ, சர்வோ கையை விட்டுப் போகும் தருணத்தில் தங்களது அலாதியான ஷாட்களினால் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பியது உயர்தர டென்னிஸ் வீரர்களுக்கே உரித்தானது. இத்தனைக்கும் இந்தத் தொடரில் இவர்கள் இருவரும் இறுதிக்கு முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஜோகோவிச், முர்ரே தோல்வி தழுவியதால் இவர்கள் இருவருக்குமான இறுதிப் போட்டியாக அமைந்தது.

குறிப்பாக ரபேல் நடாலுடன் இதற்கு முன்னர் பெடரர் 34 முறை மோதியதில் 11-23 என்று வெற்றி விகிதத்தில் பின் தங்கியே இருந்தார். இன்றைய வெற்றி நடாலின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.

இன்றைய ஆட்டத்தில் இருவருமே நல்ல ரிதமில் இருந்தனர், குறிப்பாக காயத்திலிருக்கும் பெடரர் நடாலின் 90% முதல் சர்வ்களை திருப்பிய விதம் நம்பமுடியாத அளவுக்கு அமைந்தது. பெடரரின் 5-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும் இது. 2010-ல் ஆண்டி முர்ரேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்.

பெடரர் ஆட்டத்தில் புதிய மெருகு கூடியிருந்தது, சர்வில் அதிக ஏஸ்களை அவரே அடித்தார், இவர் 20 ஏஸ்களை அடிக்க நடால் 5க்கும் குறைவான ஏஸ்களையே அடிக்க முடிந்தது. பெடரரின் பேக்ஹேண்ட் ஷாட்கள் நடாலுக்கு பெரும் சிரமங்களை அளித்தன. அதே போல் பெடரர் தன் சர்வில் ஏஸ்களுடன், டீப் சர்வ்களை அடித்து நடால் அதனை திருப்புவதற்குள் வலைக்கருகே வந்து வாலிகளையும் சாத்துமுறைகளையும் வழங்கியதும் பழைய பெடரரை நினைவூட்டியது.

முதல் செட்டில் இத்தகைய ஆட்டத்தில்தான் ஒரே ஒரு நடால் சர்வை முறியடித்து முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினார் பெடரர்.

ஆனால் 2வது செட்டில் நடால் பெடரரின் 2 சர்வ்களை முறியடித்தார், இதற்கு பெடரரின் டபுள் பால்ட்களும், ரிஸ்கான ஷாட்கள் சில வலையிலும் வெளியிலும் சென்றதுமாகும். இதனையடுத்து 2-வது செட்டில் 4-0 என்று அதிரடி முன்னிலை பெற்ற நடால் செட்டை 6-3 என்று கைப்பற்றினார்.

3-வது செட்டில் இதே நிலை அப்படியே மாறி பெடரரின் அபாரமான ஆட்டத்தினாலும் நடாலின் சில தவறுகளினாலும் பெடரர் 4-0 என்று முன்னிலை பெற்றார். பிறகும் நடால் சர்வை பிரேக் செய்து 3-வது செட்டை பெடரர் 6-1 என்று கைப்பற்றினார்.

4-வது செட் பரபரப்பான நிலையில் தொடங்கியது. இதில் 4-வது சர்வ் கேமில் பெடரர் சர்வை வீழ்த்தினார் நடால், ஆனாலும் பெடரருக்கும் பிரேக் செய்ய வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அப்போதெல்லாம் நடால் தனது பிடியை விட்டுக் கொடுக்காமல் சிலபல போர்ஹேண்ட் ஷாட்களினால் பெடரரை நிலைகுலையச் செய்தார் இதனையடுத்து 4-வது செட்டை நடால் 6-3 என்று கைப்பற்றினார்.

5-வது செட்டில் ரசிகர்களின் கடும் ஆதரவுடன் பெடரர் களமிறங்கினார், ஆனால் நடால் பெடரரின் ரிஸ்க் ஆட்டங்களை திறமையாக முறியடித்து பெடரர் சர்வை முறியடித்தார். ஆனால் அதன் பிறகு நடாலின் இரண்டு சர்வ்களை எதிர்கொண்ட பெடரர் அவரது முதல் சர்வ் அனைத்தையும் அருமையாகத் திருப்பினார், அதன் பிறகான ராலியில் பேக்ஹேண்ட், போர்ஹேண்ட் என்று நடாலை அலைக்கழித்து பிரேக் செய்தார், மீண்டும் தன் சர்வை போராடி வென்று நடாலின் இன்னொரு சர்வையும் முறியடித்தார். கடைசியில் பரபரப்பான தனது கடைசி கேம் சர்வில் நடால் கொடுத்த கடும் சவால்களையும் மீறி பெடரர் வெற்றி பெற்றார்.

3 வேறுபட்ட கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீர்ர் என்ற வரலாற்றையும் பெடரர் இன்று நிகழ்த்தினார். பெடரர் இதுவரை 5 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 7 விம்பிள்டன் பட்டங்களையும், 5 அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ஒரேயொரு பிரெஞ்ச் ஓபன் பட்டமும் வென்று சாதனை படைத்துள்ளர் பெடரர்.

ராட்லேவர் எரினா பொதுவாக எதிர்பார்க்கக்கூடிய பவுன்ஸ் உள்ளதே, இத்தகைய தரைகளில் நடாலை விட பெடரருக்கு கூடுதல் சாதகம் என்றாலும், நடாலின் ஆட்டத்திலும் கடும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அவரது முதல் சர்வ்களை பெரும்பாலும் பெடரர் நன்றாகவே ரிடர்ன் செய்தார்.

ஆனால் தவறுகள் என்று எடுத்துக் கொண்டால் பெடரர் 57 முறையும் நடால் 28 முறையும் தவறிழைத்தனர். டபுள் பால்ட்கள் என்ற வகையில் இருவருமே 3 முறை, ஆனால் நடால் முக்கியமான இறுதி செட்டில் செய்த டபுள் பால்ட் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x