Published : 22 Jul 2016 08:14 PM
Last Updated : 22 Jul 2016 08:14 PM
ஓல்ட் டிராபர்டில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் சதம் கண்டு விளையாடி வருகிறார்.
இவருடன் ஜோ ரூட் 80 ரன்கள் எடுத்து துணை சேர்க்க, இருவரும் இணைந்து சற்று முன்வரை 2-வது விக்கெட்டுக்காக 168 ரன்களைச் சேர்த்து ஆடி வருகின்றனர்.
அலைஸ்டர் குக் ஆட்டத்தின் 52-வது ஓவரில் மொகமது ஆமிரை லெக் திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடி தனது 29-வது சதத்தை எட்டினார், இதன் மூலம் டான் பிராட்மேனின் சத எண்ணிக்கையை சமன் செய்த முதல் இங்கிலாந்து வீரரானார்.
164 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் குக் 105 ரன்களுடனும் ஜோ ரூட் 140 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இங்கிலாந்து சற்று முன் வரை 1 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.
உணவு இடைவேளையின் போது 95/1 என்று இங்கிலாந்து இருந்த போது குக் 40 ரன்களில் இருந்தார், அதன் பிறகு அவர் தனது 29வது சதத்தை எட்டி வலுவாகச் சென்று கொண்டிருக்கிறார்.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் எடுத்த இங்கிலாந்து அணி மொகமது ஆமிரின் அபாரமான பந்துக்கு ஹேல்ஸை (10) பவுல்டு முறையில் இழந்தது.
கடந்த டெஸ்ட் நாயகன் யாசிர் ஷா 18 ஓவர்களில் இதுவரை 69 ரன்கள் கொடுத்துள்ளார், ஆமிர் மட்டுமே 1 விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். வஹாப் ரியாஸ், ரஹத் அலி பந்து வீச்சிலும் தாக்கம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT