Published : 10 Nov 2013 12:42 AM Last Updated : 10 Nov 2013 12:42 AM
உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் ஆனந்த் - கார்ல்சன் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது.
இரு வீரர்களும் தங்களது காயை தொடர்ச்சியாக ஒரே கட்டத்திற்கு நகர்த்தியதால் 16-வது நகர்த்தலோடு முடிவுக்கு வந்தது போட்டி.
வழக்கமாக முதல் சுற்றில் வெள்ளைக்காயுடன் விளையாடுபவருக்கே கூடுதல் சாதகம் என்றாலும், கார்ல்சனின் வெற்றியைத் தடுத்திருப்பதன் மூலம் ஆனந்த் தனது பலத்தை நிரூபித்திருக்கிறார்.
நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஆனந்த் கறுப்பு காயுடனும், கார்ல்சன் வெள்ளைக் காயுடனும் களமிறங்கினர்.
போட்டி நடை பெறும் கண்ணாடி அறைக்குள் முதலில் கார்ல்சனும், பின்னர் ஆனந்தும் வந்தனர். இருவரும் கை குலுக்கிவிட்டு அவரவர் இருக்கையில் அமர சரியாக 3 மணிக்கு போட்டி தொடங்கியது.
வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுபவர்தான் முதலில் காயை நகர்த்த வேண்டும். கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடியதால், அவருடைய விருப்பப்படி உலக செஸ் சம்மேளன தலைவர் இல்யும்ஷிநோவ் வெள்ளைக் குதிரையை நகர்த்தி போட்டியைத் தொடங்கி வைத்தார்.
ரெட்டி முறையிலான இந்த ஆட்டத்தின் ஒன்பதாவது நகர்த்தலில் இருவரும் ஆளுக்கொரு சிப்பாயை கைப்பற்றினர். கார்ல்சன் தனது ராணியை முன்னுக்கு எடுத்துவந்து அதிரடிகாட்ட விரும்பினார். ஆனந்த் அதை முறியடிக்க தனது குதிரையினால் கார்ல்சனின் ராணியின் மீது தாக்குதல் தொடுத்தார்.
இருவரும் மீண்டும் மீண்டும் அதே உத்தியைக் கையாண்டதால் ஒரே ஒரு சிப்பாய் மட்டுமே கைப்பற்றப்பட்ட நிலையில் 16-வது நகர்த்தலிலேயே போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளிகள் வழங்கப்பட்டன.
6 மணி நேரத்துக்கும் மேலாக போட்டி இழுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணி, 30 நிமிடங்களிலேயே போட்டி முடிவுக்கு வந்தது.
முன்னதாக ஆனந்தும் கார்ல்சனும் 62 போட்டிகளில் மோதியிருந்தாலும் ரெட்டி முறை ஆட்டத்தில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.
வெள்ளைக் காயுடன் களமிறங்குகிறார் ஆனந்த்...
இன்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்) 2-வது சுற்றில் ஆனந்த் வெள்ளைக் காயுடனும், கார்ல்சன் கறுப்புக் காயுடனும் களம் காண்கின்றனர்.
போட்டிக்குப் பிறகு கார்ல்சன் கூறுகையில், ''இதுபோன்ற குழப்பம் நிறைந்த சில போட்டிகளில் ஏற்கெனவே விளையாடி டிரா செய்திருக்கிறேன். போட்டி டிராவில் முடிந்ததைப் பற்றி கவலையில்லை. எந்தப் பாதிப்பும் இல்லை'' என்றார்.
ஆனந்த் கூறுகையில், ''முதல் சுற்றை டிராவில் முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் 11 சுற்றுகள் மீதமிருக்கின்றன. அதில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினமானது'' என்றார்.
WRITE A COMMENT