Published : 07 Nov 2014 03:49 PM
Last Updated : 07 Nov 2014 03:49 PM
தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவரது சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் தாடி வைத்த பாகிஸ்தானியர் ஒருவர் மைதானத்தில் இறங்கி கபில்தேவ், கேப்டன் ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர் ஆகியோரை வசைபாடியது பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட தருணம் எப்படிப்பட்டது என்பதையும் வர்ணித்துள்ளார்.
இனி சச்சின்...
"அது ஒரு அக்னி பரிட்சை. வாசிம், வக்கார் பந்து வீச்சிற்கு எதிராக நான் ஒன்றும் புரியாமல் இருந்த சமயம். நான் எனது பேட்டிங் திறமையை சந்தேகித்தேன், சர்வதேச தரத்திற்கு என்னால் உயரமுடியுமா என்ற சந்தேகம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது.
என்னுடைய அறிமுகப் போட்டியின் முக்கியத்துவம் என்னவெனில் பாகிஸ்தானில் அவர்களது சிறந்த பந்து வீச்சாளர்களான இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அகிப் ஜாவேத், அப்துல் காதிர் ஆகியோரை எதிர்கொண்டதே.
எனது அறிமுக டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரம் வீசிய ஓவரின் 3வது பந்தில் நான் ஸ்ட்ரைக்கிற்கு வந்தேன். அது ஒரு பயங்கர பவுன்சர். வாசிம் அக்ரம் பந்து வீச்சை ஓரளவுக்குக் கணித்திருந்த நான் அடுத்த பந்து பயங்கர யார்க்கராக இருக்கலாம் என்று நினைத்தேன். அதற்குத் தயாராகவும் இருந்தேன். ஆனால் அந்த ஓவர் முழுதையும் பவுன்சர்களாகவே வீசினார் வாசிம்” என்று எழுதியுள்ளார் சச்சின்.
சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் அடி வாங்கியது பற்றி அவர் எழுதுகையில், “வக்கார் பந்து வீச வந்த போது நான் ஒரு ரன் எடுத்திருந்தேன். வக்கார் ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீசினார். நான் பந்தின் பவுன்சை தவறாகக் கணித்தேன். நான் எதிர்பார்த்ததை விட 6 அங்குலம் அதிகமாக பந்து எழும்பியது. அது ஹெல்மெட்டின் முனையில் பட்டு என் மூக்கைப் பதம் பார்த்தது.
என்னுடைய பார்வை மங்கத் தொடங்கியது. எனது தலை கனக்கத் தொடங்கியது. அடிபட்டவுடன் எனது உடனடி எதிர்வினை பந்து எங்கு சென்றது என்பதைப் பார்ப்பதாகவே இருந்தது. அதன் பிறகுதான் கவனித்தேன் மூக்கிலிருந்து ரத்தம் சட்டையில் வழிந்திருந்தது.
அடிபட்டதிலிருந்து மெதுவே மீள நினைத்த போது ஜாவேத் மியாண்டட் கூறிய கமெண்ட் என்னை ஆச்சரியப்படுத்தியது, “நீ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், உன் மூக்கு உடைந்து விட்டது” என்றார். எனது இந்த நிலையில் என்னைப் பற்றி பார்வையாளர்கள் வைத்திருந்த பேனர் என்னை மேலும் அசவுகரியப்படுத்தியது. "குழந்தை! நீ வீட்டுக்கு போய் பால் குடி” என்று அந்த பேனரில் எழுதியிருந்தது” என்று நினைவு கூர்ந்துள்ளார் சச்சின்.
அதன் பிறகுதான் அவரை திடுக்கிட வைத்த சம்பவம் பற்றி அவர் எழுதியுள்ளார்:
சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் நாளில் நாடகத்திற்குக் குறைவில்லை. குறிப்பாக ஒரு சம்பவம் என்னை சங்கடப்படுத்தியது. உணவு இடைவேளைக்குப் பிறகு தாடி வைத்துக் கொண்டு சல்வார் கமீஸில் மைதானத்திற்குள் புகுந்த ஒரு ரசிகர், நேராக கபில்தேவிடம் சென்று பாகிஸ்தானில் அவர் இருப்பதற்காக வசைச்சொற்களைப் பயன்படுத்தினார்.
கபில்தேவை வசைபாடிய பிறகு மிட் ஆஃப் திசையில் மனோஜ் பிரபாகரிடம் சென்று சிலபல வசைச்சொற்களைப் பயன்படுத்தினார். பிறகு நேராக கேப்டன் ஸ்ரீகாந்திடம் சென்ற அந்த நபர் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டார்.
நான் பாயிண்ட் திசையில் பீல்ட் செய்து கொண்டிருந்தேன், அடுத்து நான் என்ற பீதி என்னைத் தொற்றிக்கொண்டது. அவர் என்னிடம் வந்தால் ஓய்வறை நோக்கி ஓட ஆயத்தமானேன். உண்மை என்னவெனில், இரு நாடுகளுக்கு இடையிலும் கிரிக்கெட் ஆட்டத்தைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பதே” இவ்வாறு சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT