Published : 24 Feb 2014 10:43 AM
Last Updated : 24 Feb 2014 10:43 AM

டேவிட் ஃபெரர் அதிர்ச்சி தோல்வி

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் அதிர்ச்சி தோல்வி கண்டார். சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளவரான டேவிட் ஃபெரர் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலவிடம் தோல்வி கண்டார்.

இதன்மூலம் ஃபெரருக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சர்வதேச தரவரிசையில் 54-வது இடத்தில் இருக்கும் டோல்கோபோலவ். இதற்கு முன்னர் ஃபெரருடன் விளையாடிய 7 போட்டிகளிலும் டோல்கோபோலவ் தோல்வி கண்டி ருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்துப் பேசிய டோல்கோபோலவ், “அரை யிறுதியில் விளையாடிய விதம் மனநிறைவு அளிக்கிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி. ஃபெரருக்கு எதிராக எப்போதுமே எனது ஆட்ட உத்தி ஆக்ரோஷமாக இருக்கும். தாக்குதல் ஆட்டத்தையும், ஆக்ரோஷ ஆட்டத்தையும் வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

சிறப்பான ஷாட்களை ஆடினேன். அதுதான் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக நினைக்கிறேன்” என்றார். 2012 அக்டோபருக்குப் பிறகு இப்போதுதான் ஏடிபி போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் டோல்கோ போலவ். 2012 ஆகஸ்டில் நடைபெற்ற சிட்டி ஓபனில் பட்டம் வென்ற டோல்கோபோலவ், ரியோ ஓபன் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடாலை சந்திக்கிறார்.

48-வது ஏடிபி பட்டம் வெல்லக் காத்திருக்கும் ஸ்பெயினின் நடால், தனது அரையிறுதியில் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகே வெற்றி கண்டார். சகநாட்டவரான பாப்லோ அன்டுஜாரை எதிர்த்து விளையாடிய நடால், முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்தார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் நடால் கைப்பற்றியபோதும், 3-வது செட் கடும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை கடைசி வரை போராடிய நடால் 12-10 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட் 7-6 (10) என்ற கணக்கில் நடால் வசமானது. இதன்மூலம் வெற்றி கண்ட நடால் இறுதிச்சுற்றை உறுதி செய்தார். 88-வது ஏடிபி பைனலுக்கு முன்னேறியுள்ள நடால், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் களிமண் ஆடுகளத்தில் அவர் வென்ற 43-வது பட்டமாக இது அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x