Published : 17 Mar 2017 02:19 PM
Last Updated : 17 Mar 2017 02:19 PM

சுவர் போல் நின்ற ஸ்மித் 178*; மேக்ஸ்வெல் சதம்: ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவிப்பு

ஸ்மித்தின் அபாரமான 178 ரன்கள், மெக்ஸ்வெலின் முதல் டெஸ்ட் சதம், வேட், ஓகீஃப் ஆகியோரது சிறு பங்களிப்புகள் மூலம் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் ஜடேஜா 49.3 ஓவர்கள் வீசி 8 மெய்டன்களுடன் 124 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கோலி இன்றும் களமிறங்கவில்லை, வலது கையில் லேசான காயம். ஆனால் அவர் பேட்டிங்கில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

பிட்ச் தொடர்ந்து பேட்டிங்குக்குச் சாதகமாகவே இருந்தது, இதில் ஸ்மித், மேக்ஸ்வெல் எச்சரிக்கையுடனும் அதே வேளையில் அவ்வப்போது ஆக்ரோஷமும் காட்டினர்.

ஸ்மித்150 ரன்களைக் கடந்தார். ஒரேயொரு முறை இசாந்த் சர்மா பந்தில் எட்ஜ் எடுத்தது, ஆனால் சஹாவுக்கு முன்னால் பந்து விழுந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பிய மேக்ஸ்வெல் தேர்ட்மேனில் பவுண்டரி அடித்து தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

104 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல், ஜடேஜாவின் திரும்பி எழும்பிய பந்தில் சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மேத்யூ வேட் (37) ஸ்மித் கூட்டணி 50 ரன்களை சேர்த்தனர். வேட், ஜடேஜாவின் அருமையான பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அதே ஓவரில் கமின்ஸ் ஜடேஜாவிடம் பவுல்டு ஆனார்.

ஓகீஃப், ஸ்மித்துக்கு ‘ஸ்டாண்ட்’ கொடுத்தார். அவர் 71 பந்துகள் இந்தியப் பந்து வீச்சாளர்களை வெறுப்பேற்றி 25 ரன்கள் எடுத்து உமேஷ் பந்தை ஹூக் செய்து அவுட் ஆனார். நேதன் லயனும் ஜடேஜாவின் பவுன்ஸை சமாளிக்க முடியாமல் 1 ரன்னில் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹேசில்வுட், ராகுல்-ஜடேஜா கூட்டணியின் முயற்சியில் ரன் அவுட் ஆனார்.

ஸ்மித் மிக அபாரமான இன்னிங்ஸை ஆடி கடைசி வரை வீழ்த்த முடியாமல் 361 பந்துகளைச் சந்தித்து 17 பவுண்டரிகளுடன் 178 ரன்கள் எடுத்து சுவர் போல் நின்றார்.

விருத்திமான் சஹா 9 ‘பை’-களை விட்டுக் கொடுத்தார். உதிரிவகையில் 22 ரன்கள் சேர ஆஸ்திரேலியா 451 ரன்களை எடுத்து தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டது.

சற்று முன்வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இன்னமும் 32 ஓவர்கள் வீச வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x