Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM
சர்வதேச கார் பந்தயத்தில் தொடர்ந்து 8 வெற்றிகளைப் பெற்று மைக்கேல் ஷுமேக்கரின் சாதனையை முறியடித்தார் செபாஸ்டியான் வெட்டல்.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற யு.எஸ். கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியிலும் செபாஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தார் வெட்டல்.
2004-ம் ஆண்டில் ஜெர்மனியின் மைக்கேல் ஷுமேக்கர் தொடர்ந்து 7 போட்டிகளில் வென்றதே கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாதனையாக இருந்தது. இப்போதைய வெற்றி வெட்டலின் 8-வது தொடர் வெற்றி மட்டுமல்ல, இந்த சீசனின் 12-வது வெற்றியாகும். யு.எஸ். கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் லோட்டஸ் அணியின் ருமெயின் கிராஸ்ஜீன் இரண்டாவது இடத்தையும், ரெட் புல்ஸ் அணியின் மார்க் வெப்பர் 3-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றிக்குப்பின் மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்ட வெட்டல், தான் பேச்சை இழந்து நிற்பதாகத் தெரிவித்தார்.
யு.எஸ். கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சகாரா போர்ஸ் இந்தியா அணி புள்ளிகள் எதையும் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பியது.
சகாரா அணி சார்பில் பங்கேற்ற பால் டி ரெஸ்டா 15-வது இடத்தைப் பிடித்தார். அட்ரியன் சுடில் முதல் ரவுண்டிலேயே மற்றொரு காருடன் மோதி போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியாவில் இருந்து இப்போட்டியில் பங்கேற்ற ஒரே அணி சகாரா போர்ஸ் இந்தியா அணியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT