Published : 30 Jul 2016 04:18 PM
Last Updated : 30 Jul 2016 04:18 PM
பல்லெகிலே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் அரிய டெஸ்ட் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களான ஓ கீஃப் மற்றும் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் ஆகியோர் இணைந்து 29.4 ஓவர்கள் இலங்கை பந்து வீச்சை வெறுப்பேற்றி 9-வது விக்கெட்டுக்காக 4 ரன்களையே சேர்த்தனர். அதாவது 178 பந்துகளைச் சந்தித்து 4 ரன்களை மட்டுமே சேர்த்து அசாத்தியமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போராடினர். இதில் 25.3 ஓவர்கள் மெய்டன் என்ற புதிய டெஸ்ட் சாதனையும் நிகழ்த்தப்பட்டது. இன்னிங்ஸின் 63-வது ஓவரின் 5-வது பந்தில் ஓ கீஃப் பவுண்டரி அடித்தார். இதுதான் கடைசி ஸ்கோரிங் ஷாட். ஸ்கோர் 161/8 என்று இருந்தது, ஆனால் ஆட்டம் 88.3-வது ஓவரில் முடியும் போதும் ஸ்கோர் 161 ரன்கள்தான். எனவே 64-வது ஓவரில் தொடங்கிய மெய்டன் 88.3 ஓவர் வரை தொடர் நீடித்து அதே ஸ்கோரிலேயே ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது.
இதில் பீட்டர் நெவில் 115 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள். ஓ’கீஃப் 98 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள். வெளிச்ச அச்சுறுத்தல் இருந்ததால் டிராவுக்காக மகத்தான தடுப்பாட்ட போராட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.
83/3 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா மழை அச்சுறுத்தல்களுக்கிடையே தனது இரண்டாவது இன்னிங்சில் 161 ரன்களுக்குச் சுருண்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் வெற்றியையே பெற்றது. ரங்கனா ஹெராத் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸ்திரேலிய தோல்வித் துயரத்துக்கு பெரும் காரணமாக அமைந்தார்.
முதல் இன்னிங்ஸில் அதுவும் முதல் நாளிலேயே 117 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி தன் 2-வது இன்னிங்சில் குசல் மெண்டிஸின் அபாரமான மிகப்பெரிய சதத்தின் மூலம் உயிர் பெற்றது. ஆஸ்திரேலியா தனது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீஃபை 2-வது இன்னிங்சில் காயம் காரணமாக இழந்ததும் அந்த அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனாலும் குசல் மெண்டிஸின் இரண்டாவது இன்னிங்ஸ் 176 ரன்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்று டெஸ்ட் இன்னிங்ஸாக அமைந்தது. மேலும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் லக்சன் சந்தகன் இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக ஜோ பர்ன்ஸை 2-வது இன்னிங்ஸில் அவர் பவுல்டு செய்தது இடது கை ஷேன் வார்ன் பந்தாகும். ரங்கனா ஹெராத் இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
காரணம் 1999-ம் ஆண்டு கண்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு தற்போது ஆஸ்திரேலியாவை இலங்கை வீழ்த்தியுள்ளது. இது மொத்தமாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் வெற்றியாகும்.
இன்று காலை ஆடம் வோஜஸ் 12 ரன்கள் எடுத்து ரங்கனா ஹெராத் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பந்து மட்டையில் பட்டு தரையில் பட்டிருக்கலாம் என்ற ஐயத்தில் 3-வது நடுவர் ரிவியூவுக்குச் சென்றது, ஆனால் அது தரையில் படாமல் வந்தது உறுதியானது.
96/4 என்ற நிலையிலிருந்து கேப்டன் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 43 ரன்களைச் சேர்த்தனர். 37 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்த மிட்செல் மார்ஷ், ஹெராத் பந்து ஒன்று நேராக உள்ளே சறுக்கிக் கொண்டு வர காலில் வாங்கினார். பலத்த முறையீட்டில் நடுவர் நாட் அவுட் என்றார், பந்து மட்டையில் முதலில் பட்டிருக்கலாம் என்ற ஐயத்தில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது, ஆனால் மேத்யூஸ் ரிவியூவுக்குச் சென்றார். அதில் கால்காப்பில் முதலில் பட்டது தெரியவந்தது, அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஸ்மித் நிதானப் போக்கில் ஆடி 125 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 55 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றிக்கு குறுக்காக இருந்த போது மார்ஷுக்கு வீசியது போலவே ஒரு பந்தை ஸ்டம்புக்கு நேராக கோணத்தில் உள்ளே கொண்டு வர உள்விளிம்பைத் தாண்டி பேடைத் தாக்கியது இதில் சந்தேகம் எதுவும் இல்லை, ஆனாலும் ஸ்மித் ரிவியூ செய்தார். ஆனால் ஸ்மித்தை ரிவியூ காப்பாற்றவில்லை. ஸ்டார்க் ரன் எடுக்காமல் சந்தகன் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து மென்மையாக ஆட்டமிழந்து சென்றார். நேதன் லயன் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்றார் பந்து திரும்பி பேடைத் தாக்க எல்.பி.ஆனார். இவரும் ரிவியூ செய்து விரயம் செய்தார்.
இதன் பிறகுதான் பீட்டர் நெவில், ஓ’கீஃப் இணைந்து 178 பந்துகள் போராடினர் 4 ரன்களையே அடித்தனர். இலங்கை இடையில் சில்வா பந்தில் பெரிய எட்ஜ் எடுத்து ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்தார் ஓ கீஃப் ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், இலங்கை ரிவியூக்கள் காலியானதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கடைசியில் சில்வா, 178 பந்துகள் வெறுப்பேற்றிய ஜோடியை முறியடித்தார், நெவில் விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்தார். ஓ’கீஃப் 4 ரன்களில் ஹெராத்திடம் பவுல்டு ஆனார். மொத்தம் 88.3 ஓவர்கள் ஆடிய ஆஸ்திரேலிய அணி அதில் 37 ஓவர்களை மெய்டன்களாக்கியது.
பேட்டிங் சரிவு காரணமாகவே ஆஸ்திரேலியா தோல்வி தழுவியது. ஆனால் 117 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டு மீண்டு எழுந்தது இலங்கை. ஆட்ட நாயகனாக் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT