Published : 21 Dec 2013 09:32 PM
Last Updated : 21 Dec 2013 09:32 PM
இந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி பெற இன்னும் 320 ரன்கள் தேவையுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்கா நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவிருக்கிறது.
இன்றைய ஆட்டத்தின் முதல் பகுதியில், நேற்று சதமடித்திருந்த புஜாரா 150 ரன்களைக் கடந்தார். ஆனால் மேலும் மூன்று ரன்கள் மட்டுமே சேர்த்த அவர் காலிஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த ரோஹித் சர்மாவும் 6 ரன்களில் காலிஸின் பந்திலேயே ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடி வந்த கோலி, முதல் இன்னிங்க்ஸைப் போன்றே, இன்றும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷடவசமாக 96 ரன்களில், டுமினியின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த இந்திய வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் போகவே, இந்தியா 421 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
458 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இரண்டு பேட்ஸ்மென்களுமே பொறுப்பாக ஆடினர். கேப்டன் ஸ்மித் 44 ரன்களும், பீட்டர்ஸன் 61 ரன்களும் எடுக்க, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைத் தாண்டியது. அஸ்வின் வீசிய ஓவரில் ரன் எடுக்க முயன்ற ஸ்மித், ரஹானேவின் திறமையான ஃபீல்டிங்கினால் ரன் அவுட்டானார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு விக்கெட் விழ, அடுத்து ஆட வந்த ஆம்லாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஷமியின் பந்தில் அவுட்டானார். இதனால் ஆட்டத்தின் பிடியை தன் கைக்குள் கொண்டு வந்தது இந்திய அணி. துவக்க ஆட்டக்காரர் பீட்டர்ஸன் 76 ரன்கள் எடுத்திருக்க, உடன் களத்தில் இருக்கும் ப்ளெஸிஸ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 138/2.
போட்டியின் கடைசி நாளான நாளை, மீதமுள்ள 320 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்து வெற்றி பெற முயலுமா, அல்லது டிரா செய்ய முயலுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கைக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் நாளை திறமையாக பந்து வீசினால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும். எது எப்படியோ, இந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமான நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பந்துவீசிய தோனி
இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில், இரண்டு ஓவர்களை இந்திய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி வீசினார். அந்த இரண்டு ஓவர்களிலும் கோலி விக்கெட் கீப்பிங் செய்தார். இதற்கு முன்னரே ஒரு சில போட்டிகளில் தோனி பந்து வீசியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்க்ஸில், தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் டி வில்லியர்ஸும் பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT