Published : 08 Mar 2017 12:12 PM
Last Updated : 08 Mar 2017 12:12 PM

உணர்ச்சிகரமான போட்டியில் ‘இனிமையான’ வெற்றி: விராட் கோலி நெகிழ்ச்சி

பெங்களூருவில் பரபரப்பான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்தப் போட்டி உணர்ச்சிகரமானது என்றும் இந்த வெற்றி ‘இனிமையானது’ என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

“இந்த வெற்றி உண்மையில் இதுவரையிலுமான சிறந்த வெற்றியாகும். நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆட்டத்தின் போக்கு சரியாகவே சென்றது. இது எங்களுக்கு உணர்ச்சிகரமான போட்டி, நிறைய உழைப்பும் தேவைப்பட்ட போட்டி, அனைவரும் ஒருங்கிணைந்து நல்ல அணி உணர்வை வெளிப்படுத்தினோம்” என்றார்.

டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நேதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய போது விராட் கோலி விக்கெட் பற்றி இவ்வாறு கூறியிருந்தார், “பாம்பின் தலையை வெட்டி விட்டால் உடம்பு தானாகவே அடங்கிவிடும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமகா விராட் கோலி கூறும்போது, “ஒரு சிலர் ‘பாம்பின் தலை’ என்றெல்லாம் பேசினர், ஆனால் பாம்பு தானாகவே சிறப்பாகவே திகழ்ந்தது, எனவே ஒரு தனிப்பட்ட வீரர் பற்றியதல்ல என்பது நிரூபணமானது. அவர்கள் தொடர்ந்து பாம்பின் தலையையே குறிவைத்துக் கொண்டிருந்தால் பல திசைகளிலிருந்தும் பாம்பு வந்து கொண்டேயிருக்கும். சிலர் இதனை மனதில் கொள்வது நல்லது. ஆனால் இது மிகவும் இனிமையான வெற்றி என்றே எனக்குப் படுகிறது.

2-ம் நாளில் முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 45 ரன்கள் (47) மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம். எங்களிடமிருந்து ஆஸ்திரேலியா ஆட்டத்தைப் பறித்துச் செல்லவிருந்த அந்தக் கணத்தில் ஆட்டத்தின் போக்கு மாறியது. அன்றைய தினம் முழுதுமே 200 ரன்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம்.

இதுதான் ஒரு அணியாக நாங்கள் ஆட வேண்டிய ஆட்டமாகும். யாராவது ஒருவர் எழுந்து அணிக்கு வலு சேர்க்கும் விதமாக ஆடுவார். முதல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் ரவீந்திர ஜடேஜா தனிச்சிறப்பாகத் திகழ்ந்தார். அதே போல் ஒரு முனையிலிருந்து இசாந்த் சர்மா, யாதவ் ஓய்வு ஒழிச்சலில்லாமல் ஆஸி. அணியினருக்கு நெருக்கடி கொடுத்தனர். பிற்பாடு ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்த இவர்கள் பந்து வீச்சு வழிவகுத்தது.

முயற்சியை விட்டுக் கொடுக்காமல் ஆடினோம். நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. எதிரணியினர் நம் மீது விழுந்து அமுக்க அனுமதிக்கவில்லை. நாங்கள் முதல் தர கிரிக்கெட் புள்ளி விவரங்களைப் பார்த்தோம், இந்த மைதானத்தில் எந்த அணியும் 120 ரன்களை 4-வது இன்னிங்ஸில் துரத்த முடியவில்லை. எனவே 150ரன்கள் அதற்கு மேல் முன்னிலை என்றால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு நம் பக்கம் என்றே திட்டமிட்டோம். ஆனால் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆச்சரியமளிக்கிறது. இன்னும் நெருக்கமாகச் செல்லும் என்றே நினைத்தோம்.

ராகுலின் கடைசி 3 இன்னிங்ஸ்கள் அபாரமானது. சதம் எடுக்காவிட்டாலும் அணிக்கு செய்யும் சிறு பங்களிப்பில் நீ மகிழ வேண்டும் என்று நான் ராகுலிடம் கூறினேன். அவர் தனது நல்ல தொடக்கங்களை பெரிய சதமாக மாற்ற விரும்புகிறார். அவர் அருமையான நிதானப்போக்கை கடைபிடித்தார், இதன் மூலம் வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடக்க வீரராக இந்திய அணிக்கு ஒரு நிலைத்தன்மையை அளிப்பார் அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பார் என்று கருதுகிறேன்.

2-வது இன்னிங்ஸில் உத்வேகம் மெதுவே தளர்ந்து வரும் நிலையில் ரஹானே, புஜாரா ரனக்ள் கூட்டணி மிக முக்கியமாக அமைந்தது. இழந்த உத்வேகத்தை கூட்டணி மூலம் மீட்டுத் தருவது என்பது அவர்களது இன்னிங்சின் ‘கேரக்டர்’ என்னவென்பதை உணர்த்துகிறது. இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மென்கள் அவர்கள் என்பதை மீண்டும் ரஹானே, புஜாரா நிரூபித்தனர்.

பெங்களூரு பிட்சைப் பற்றி தெரிந்ததால் ஒரு பந்து வீச்சாளர் குறைபாடு இருந்ததாக நான் கருதவில்லை. லயன் அவர்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இங்கு ஜடேஜா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிறகு அங்கு ஹேசில்வுட் 6 விக்கெட், இங்கு அஸ்வின் 6 விக்கெட். எப்போதுமே ஒரு பவுலர் தனிச்சிறப்பாக இங்கு ஆடிவந்துள்ளனர், முதல் தர கிரிக்கெட்டிலும் இங்கு நாம் அதனைப் பார்த்திருக்கிறோம்.

இந்த புள்ளிவிவரங்களை வைத்துத்தான் ஒரு கூடுதல் பேட்ஸ்மன் தேவை என்று முடிவெடுத்தோம்.

அடுத்த டெஸ்ட் போட்டி ராஞ்சியில், இங்கு பிட்சில் பந்துகள் எப்போதுமே மெதுவாகவும் தாழ்வாகவுமே வரும். எது வருகிறதோ அதனை மனரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x