Published : 22 Aug 2015 03:22 PM
Last Updated : 22 Aug 2015 03:22 PM

சதம் அடித்தவுடன் பின்னியிடம் வீழ்ந்தார் மேத்யூஸ்: இந்தியா முன்னிலை பெற வாய்ப்பு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி பல துரதிர்ஷ்டமான தருணங்களுக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாக அஞ்சேலோ மேத்யூஸ் விக்கெட்டை தேநீர் இடைவேளைக்கு சற்று முன் வீழ்த்தினார். தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது.

மேத்யூஸ் 167 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ஸ்டூவர்ட் பின்னியின் அருமையான ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை தொட்டு விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், விக்கெட் விழுந்ததை கொண்டாடுவதற்குப் பதிலாக இதுவும் நோ-பாலா என்ற கேள்விப்பார்வையுடன் நடுவரை பார்த்தார்.

இதற்கு முதல் ஓவரில் அஸ்வின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பவுண்டரியுடன் மேத்யூஸ் சதம் எடுத்தார். அவ்வளவு திருப்திகரமான இன்னிங்ஸ் என்று கூற முடியாது. எம்.எஸ். தோனியின் பேட்டிங் உத்திபோல்தான். அவருக்கென்று ஒரு பாணி, அதில் அன்றைய தினம் தொட்டதெல்லாம் துலங்கினால் சதம் அவ்வளவே.

ஏனெனில் உணவு இடைவேளைக்கு முன் உமேஷ் யாதவ், மேத்யூஸுக்கு கடும் சங்கடங்களைக் கொடுத்தார், ஆனால் மேத்யூஸின் விசித்திரமான டெக்னிக்கினால் எட்ஜ் ஆகவில்லை. அமித் மிஸ்ராவும் தனது பிளைட்டினால் மேத்யூஸுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினார், ஆனால் இப்போதும் அவரது விசித்திர டெக்னிக்கே அவரைக் காப்பாற்றியது, முறையான மரபான பேட்ஸ்மெனாக இருந்திருந்தால் அவர் எப்போதோ பெவிலியன் சென்றிருப்பார். மற்றபடி அவ்வப்போது அவர் சில பவுண்டரிகளை அடித்தார், சிங்கிள்களை நன்றாக ரொடேட் செய்தார்.

அவரும் திரிமானேவும் உணவு இடைவேளைக்கு முன் அவுட் ஆகாமல் அணியை நிலை நிறுத்தினர். திரிமானேவும் இசாந்த்தின் பந்து வீச்சு கோணத்தில் கடும் சிக்கல்களைச் சந்தித்தார், ஆனால் எட்ஜ் மட்டும் எடுக்கவில்லை.

114/3 என்ற நிலையிலிருந்து இருவரும் இணைந்து 241 வரை ஸ்கோரை உயர்த்தினர். அப்போது திரிமானே 62 பொறுமையான ரன்களுக்குப் பிறகு இசாந்த் ரவுண்ட் த விக்கெட்டில் 4-வது ஸ்டம்ப் லைனில் வீச திரிமானே முன்னால் வந்து ஆட பந்து மட்டையின் விளிம்பை நூலிழையில் உரசிச் சென்று சஹாவிடம் கேட்ச் ஆனது. அவுட் குறித்து திரிமானே திருப்தியடையவில்லை.

ஆட்டத்தின் 97-வது ஓவரை பின்னி வீச, அந்த ஓவர் முழுதும் நிகழ்வுகளாக அமைந்தது. முதலில் முபாரக்கினால் திருப்பி அனுப்பபட்ட மேத்யூஸ் கிரீசை நெருங்க சிரமப்பட பவுலரான பின்னி பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி அடித்தார், ஆனால் மேத்யூஸ் ரீச் செய்தார்.

அடுத்த பந்தை ஷார்ட் பிட்சாக பின்னி வீச தடுப்பாட்டத்தில் மேத்யூஸ் சொதப்ப பந்து கேட்ச் போன்று சென்று கல்லிக்கு முன்னால் விழுந்தது. ஒரு ரன் எடுத்தார் மேத்யூஸ். அடுத்த பந்து முபாரக்குக்கு உள்ளே ஸ்விங் ஆக அவர் பேலன்ஸ் தவறி பிளிக் செய்ய மிட்விக்கெட்டில் பந்து காற்றில் சென்றது. 2 ரன்களாக முடிந்தது. இந்தியா தரப்பில் இசாந்த், அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பின்னி 18 ஓவர்கள் வீசி 4 மெய்டன்களுடன் 44 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இவருக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அதிர்ஷ்டமில்லை.

விக்கெட் அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்று அவர் நினைத்த தருணத்தில்தான் மேத்யூஸ் சதம் எடுத்த பிறகு விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

முன்னதாக தினேஷ் சந்திமால் 11 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த்தின் அருமையான அவுட் ஸ்விங்கருக்கு முன்னால் வந்து ஆட பந்து மட்டையில் விளிம்பில் பட்டு 2-வது ஸ்லிப்பில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனது.

கடைசியாக அமித் மிஸ்ரா பந்தில் தம்மிக பிரசாத் 5 ரன்களில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தற்போது முபாரக் 20 ரன்களுடனும், ரங்கனா ஹெராத் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x