Published : 14 Jun 2016 02:51 PM
Last Updated : 14 Jun 2016 02:51 PM
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு அதிக விக்கெட்டுகளுக்கான இந்திய சாதனையை வைத்துள்ள அனில் கும்பிளே விண்ணப்பித்துள்ளார்.
இந்திய, வெளிநாட்டு பயிற்சியாளர்கள் சேர்த்து மொத்தம் 57 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரவிசாஸ்திரி, சந்தீப் பாட்டீல் ஆகியோரை அடுத்து பயிற்சியாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ள வீரர் அனில் கும்பிளே என்று கருதப்படுகிறது.
ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு இவர் கேப்டன்சியின் போதுதான் 2009-ம் ஆண்டு ரன்னர் என்ற தகுதி கிடைத்தது. பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு நம்பிக்கை அறிவுரையாளராக இருந்தார், பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பணியாற்றி வருகிறார்.
பயிற்சியாளராக இவருக்கு அனுபவம் இல்லாவிடினும் இந்திய அணிக்காக இவர் கேப்டன்சி செய்த காலக்கட்டத்தில்தான் பெர்த்தில் ஒரு அரிய வெற்றியை இந்தியா சாதித்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய நடுவர்களின் மோசடியினால் இந்தியா தோல்வி தழுவியதே தவிர இல்லையெனில் தொடரையே இந்தியா வென்றிருக்கும், இவரது அணித்தேர்வு, ஆக்ரோஷம், டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் இவர் அறிந்த நுட்பங்கள் என்று கும்பிளேயின் தகுதிகள் ஏராளம்.
ஆனால் பிசிசிஐ-யின் நிபந்தனைகளின்படி பயிற்சியாளராவதற்கு சர்வதேச அல்லது முதல் தர மட்டத்தில் பயிற்சியாளர் சான்றிதழை விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐசிசி முழு உறுப்பினர் நாட்டின் கிரிக்கெட் வாரியம் நடத்தும் சான்றிதழ்/மதிபீட்டு திட்டத்தின் கீழ் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தச் சான்றிதழை தற்போது விண்ணப்பிக்கும் போது வைத்திருக்க வேண்டும்.
ஆனால் அனில் கும்பிளேயிடம் இம்மாதிரியான சான்றிதழ்கள் எதுவும் இல்லை, அதனால் அவர் விண்ணப்பித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT