Published : 07 Jul 2016 02:30 PM
Last Updated : 07 Jul 2016 02:30 PM
யூரோ 2016 கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டம் முழுதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 3 நிமிடங்களில் 2 கோல்கள் வேல்ஸ் அணியின் இறுதிக் கனவைத் தகர்த்தது. போர்ச்சுக்கல் முழுதும் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது.
ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஷார்ட் கார்னர் கிடைக்க போர்ச்சுகல் வீரர் ரஃபேல் குரேரியோ அருமையாக அதனை கிராஸ் செய்ய கிறிஸ்டியானோ ரொனால்டொ மிக அருமையாக தலையால் கோலுக்குள் முட்டித் தள்ளினார். இத்தனைக்கும் வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் செஸ்டர் தடுப்பதற்காக உயரே எழும்பினார் ஆனால் அவருக்கு மேலே எழும்பி ரொனல்டோ கோல் அடித்து வேல்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோல் கீப்பர் ஹெனெசேவுக்கு வாய்ப்பேயில்லாமல் போனது.
2-வது கோலிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பங்கு அதிகம். இவர் கொடுத்த பந்தைத்தான் நானி கோலாக மாற்றினார்.
மற்ற ஆட்டங்களைப் போல் அல்லாமல் இந்த அரையிறுதியில் ரொனால்டோ அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கக் கணங்களிலேயே வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட அணையை உடைக்க முயற்சி செய்தார், ஆனால் ரொனால்டோவை மிக நன்றாக வேல்ஸ் வீரர் ஆஷ்லி வில்லியம்ஸ் மேலே செல்ல விடாமல் தடுத்தார்.
வேல்ஸ் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஏரோன் ராம்சே சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்தப் போட்டியில் இல்லாதது சற்றே பின்னடைவை ஏற்படுத்தினாலும் அபாய வீரர் காரெத் பேல் அருமையான சவால் அளித்தார். கார்னர் ஷாட் ஒன்றை பேல் அடிக்க பந்து மேலே சென்றது.
இதற்கு சில நிமிடங்கள் கழித்து காரெத் பேல் மேலும் அபாயகரமான ஒரு தாழ்வான கிராஸ் செய்ய போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ நன்றாக அதனைத் தடுத்தார். 23 நிமிடங்கள் சென்ற பிறகு காரெத் பேல் தனது பகுதியிலிருந்தே ஒரு தாக்குதல் முயற்சியைத் தொடுத்து முன்னேறிச் சென்று 25 யார்டிலிருந்து அடித்தார் ஆனால் இதுவும் தடுக்கப்பட்டது.
முதல் பாதி ஆட்டம் முடியும் தருணங்களில் இருந்த போது அட்ரியன் சில்வாவின் கிராஸை ரொனால்டோ தலையால் முட்ட அது பாருக்கு வெளியே சென்றது.
முதல் பாதியில் வேல்ஸ் அணிக்கு பந்துகள் கிடைத்ததே அரிதாக இருந்தது, போர்ச்சுகல் முயற்சிகள் கோலாக மாறவில்லை.
இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் 48-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் செஸ்டர் இடது புறம் அருமையாக பேலுக்கு பந்தை அனுப்ப அவர் ஆல்வேஸுடன் ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் இறங்கினார் ஆனால் பந்தைத் தாண்டிச் சென்றார் பேல்.
இந்நிலையில்தான் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆச்சரியகரமான கோல் விழுந்தது. குரெய்ரோ மிக அருமையாக பந்தை தூக்கி அடிக்க ரொனால்டோ எழும்பிய செஸ்டரை ஆட்கொண்டு மேலே எழும்பி சக்திவாய்ந்த தலைமுட்டலால் கோலில் செலுத்தினார், வேல்ஸ் கோல் கீப்பருக்கு வாய்ப்பேயில்லை. இந்த கோல் மூலம் யூரோ 2016-ல் ஒரு தொடரில் அதிக கோல்களை அடித்த பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ. ஆம்! இருவரும் 9 கோல்கள்.
53-வது நிமிடத்தில் நீண்ட தூர ஷாட் ஒன்றை ரொனால்டோ துல்லியமாக அடிக்க அங்கு நானிக்கு தடுப்பாட்ட வீரர்களுக்கு இடையே இடைவெளி கிடைக்க அருமையாக ஸ்லைட் செய்து கோலாக மாற்றினார். 63-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது, அதனை ரொனால்டோ அருமையாக கோல் நோக்கி அடிக்க கோலுக்கு மேலே வலையில் போய் விழுந்தது.
83-வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. பேலை போர்ச்சுகல் வீரர் ஜோ மரியோ ஃபவுல் செய்தார். ஃப்ரீகிக் கிடைத்தது ஆனால் பேல் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. நேராக போர்ச்சுக்கல் அமைத்த சுவரால் தடுக்கப்பட்டு திரும்பிய பந்தையும் பேல் எடுத்தார், ஆனால் நானி அவர் கோல் வாய்ப்பை முறியடித்தார்.
கடைசியில் போர்ச்சுக்கல் 2-0 என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முக்கிய சர்வதேச கால்பந்து தொடர்களில் போர்ச்சுகல் 5 முறை அரையிறுதியில் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது. இம்முறை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இறுதியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியைச் சந்திக்கிறது போர்ச்சுகல் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT