Published : 07 Mar 2014 11:04 AM
Last Updated : 07 Mar 2014 11:04 AM
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் லம்ப், மொயீன் அலி ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். இங்கிலாந்தின் ஸ்கோர் 37 ஆக இருந்தபோது 20 ரன்கள் எடுத்திருந்த லம்ப், பிராவோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸ், பிராவோ வீசிய அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பின்னர் மொயீன் அலியுடன் ஜோ ரூட் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது.
10-வது ஓவரின் போது மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடர்ந்தது. 20-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய மொயீன் அலி 51 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஸ்கோர் 115-ஆக இருந்தபோது இங்கிலாந்து அணி 3-வது விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடி வந்த மொயீன் அலி 55 ரன்கள் எடுத்த நிலையில் மில்லர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 59 பந்துகளை எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய மோர்கன் ஒர ரன்னிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் ஜோ ரூட்டுடன், விக்கெட் கீப்பர் பட்லர் இணைந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் பந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்ந்து வந்தது. 112 சந்தித்து ஜோ ரூட் சதமடித்தார். மறுமுனையில் பட்லர் 56 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்தது.
49-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. 107 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் பிராவோ பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 122 பந்துகளை எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்.
கடைசி கட்டத்தில் பட்லர் அதிரடி காட்டினார் இது இங்கிலாந்து அணி 300 ரன்களை எட்ட உதவியது. சதமடிப்பார் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில் பட்லர் 99 ரன்களில் ராம்பால் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 84 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத்தீவுகள் தரப்பியில் டேயன் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 304 ரன்களை இலக்காகக் கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் களமிறங் கியது. தொடக்க வீரர்கள் பாவேல், ஸ்மித் ஆகியோர் முறையே 1 மற்றும் 9 ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த டேரன் பிராவோ, சிம்மன்ஸ் ஆகியோர் தலா 16 ரன்களே எடுத்தனர். இதனால் 43 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலைக்கு மேற்கிந்தியத்தீவுகள் சென்றது.
பின்னர் சாமுவேல்ஸ், ராம்தீன் ஆகியோர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடினர். ராம்தீன் ஒருமுனையில் நிலைத்து விளையாடினார். ஆனால் மறுமுனையில் சாமுவேல்ஸ் 23 ரன்கள், கேப்டன் டேயன் பிராவோ 27 ரன்கள், சமி 24 ரன்கள் என விக்கெட்டை பறிகொடுத்தனர்.
எனவே மேற்கிந்தியத்தீவுகள் அணி தடுமாறியது. எனினும் ராம்தீன் தனிநபராக வெற்றிக்கு போராடினார். அவர் அவ்வப்போது பந்துகளை எல்லைக் கோட்டு வெளியே விரட்டி நம்பிக்கை அளித்தார். எனினும் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இதனால் 47.4 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்து தோல்வியடைந்தது. கடைசி விக்கெட்டாக ராம்தீன் ஆட்டமிழந்தார். அவர் 109 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
இங்கிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகளும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தன.இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆட்டநாய கனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT