Published : 13 Oct 2014 07:38 PM
Last Updated : 13 Oct 2014 07:38 PM

நான் மிஸ்பா அல்ல; மிஸ்பாவும் நான் அல்ல: ஷாகித் அப்ரீடி

பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கின் கேப்டன்சி முறை வேறு தன்னுடைய முறை வேறு என்று ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வி தழுவியது பாகிஸ்தான், அதுவும் கடைசி போட்டியில் கடைசி ஓவரில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் ஜெண்டில் பந்து வீச்சிற்கு ஒரு ரன் கூட எடுக்காமல் கடைசி 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்ததையடுத்து அந்த அணியில் கடும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இத்தனைக்கும் நேற்றைய கடைசி ஒருநாள் போட்டியில் மிஸ்பா உல் ஹக் தன்னைத்தானே அணியிலிருந்து விலக்கிக் கொண்டதால் ஷாகித் அஃப்ரீடிதான் கேப்டன்சி செய்தார்.

இந்த நிலையில் ஈ.எஸ்.பின். கிரிக் இன்போ-வுக்கு ஷாகித் அப்ரீடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"ஆக்ரோஷமாக இருப்பதால் சில சமயங்களில் சில போட்டிகளை இழக்க நேரிடுகிறது என்பது உண்மைதான், ஆனால் ஆட்டத்தின் முடிவும், திறமையும் பின்னால் வருவதுதான் முதலில் களத்தில் நாம் காண்பிக்கும் போராட்ட குணம்தான் முக்கியம்.

களத்தில் வீரர்களது உடல் மொழி எத்தகைய தீவிரத்துடன் நாம் ஆடுகிறோம் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் விஷயம். ரசிகர்கள் எப்போதும் ஆட்டத்தின் முடிவுகளுக்கப்பால் எத்தகைய தீவிரம் மற்றும் முயற்சிகளை நாம் மேற்கொண்டோம் என்பதைக் காண்பிப்பது களத்தில் நமது உடல்மொழியே.

எந்த வீரரும் 50 ரன்களை எடுப்பார் என்றோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்றோ கணிக்க முடியாது, எனவே நாம் உத்திரவாதம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் உண்டெனில் களத்தில் நமது போராட்ட, விட்டுக் கொடுக்கக் கூடாத அணுகுமுறையைக் கடைபிடிப்பதே.

ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். நான் மிஸ்பாவாக முடியாது மிஸ்பா, அப்ரீடியாக முடியாது. அவர் தனது அணுகுமுறையில் வசதியாக உணர்ந்தால் என்ன பிரச்சனை? ஆனால் மற்ற வீரர்கள் மிஸ்பாவாக முயற்சி செய்யக்கூடாது. ஒவ்வொரு வீர்ருக்கும் அவருக்கே உரித்தான பாணிகள் உள்ளன.

மிஸ்பா தனது அணுகுமுறைகள் மூலம் போட்டிகளை வெல்கிறார் என்றால் என்ன பிரச்சினை? ஆனால் நான் வித்தியாசமானவன், நான் ஆக்ரோஷமாக ஆடுவதை விரும்புபவன், வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடவேண்டும் என்றே நான் விரும்புவேன்.

முதல்முறை கேப்டன்சி செய்த போது கிரிக்கெட் சூதாட்டத்திற்குப் பிறகான காலக்கட்டம் எனவே அது வேறுமாதிரி இருந்தது. ஓய்வறையில் இணக்கமான சூழல் இல்லை. இளம் வீரர்களிடத்தில் அதிக பரிவு காட்டினேன், ஆனால் சில வீரர்களுக்கு அச்சுறுத்தல்தான் பயனளிக்கும், எங்கள் நாடே லத்தியின் பலத்தில்தான் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானில் கேப்டன்சி என்பது சுலபமல்ல. களத்திற்கு வெளியிலும் நான் ஆக்ரோஷமாகவே இருந்தேன், ஆனால் இப்போது பாடம் கற்றுள்ளேன். சுமுகமாக நடத்த முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன்”

இவ்வாறு அந்தப் பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார் அப்ரீடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x