Published : 13 Aug 2016 08:10 AM
Last Updated : 13 Aug 2016 08:10 AM
செயிண்ட் லூசியாவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் புவனேஷ் குமாரின் அசாத்தியமான பந்து வீச்சுக்கு மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா தன் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் போட்டியை வெற்றிக்கு நகர்த்தியுள்ள இந்திய அணியில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் ரஹானே 51 ரன்களுடனும், ரோஹித் சர்மா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
3-ம் நாள் ஆட்டம் முழுதும் மழையால் பாதிக்கப்பட 4-ம் நாளான நேற்று மே.இ.தீவுகள் 107/1 என்று தொடங்கியது, ஆனால் முதல் ஒருமணி நேரத்துக்குள்ளேயே டேரன் பிராவோ(29), பிராத்வெய்ட் (64) ஆகியோரை இழந்தது, டேரன் பிராவோ மீண்டும் பவுன்சரில் காலியானார், இம்முறை இசாந்த் சர்மாவின் பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார் பந்து டாப் எட்ஜ் எடுத்து ஃபைன் லெக்கில் ஜடேஜா கையில் கேட்ச் ஆனது. இது நோ-பால் போலவும் இருந்தது, நோ-பால் இல்லை போலவும் இருந்த்து, இதனால் புதிய புரிதலின் படி சந்தேகத்தின் பலன் பவுலருக்கு அளிக்கப்பட்டது. பிராத்வெய்ட் அஸ்வினின் பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பிளாக்வுட், சாமுவேல்ஸ் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பிற்காக இந்திய அணியை அச்சுறுத்தினர். 29 டைட் ஓவர்களில் இவர்கள் 67 ரன்களைச் சேர்த்தனர், இதில் சாமுவேல்ஸ் ஒரு முறை அஸ்வினை இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார், பிளாக்வுட் கடந்த போட்டியில் அதிரடி காட்டியவர் நேற்று 86 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 20 ரன்களில் 2-வது பதிய பந்தில் புவனேஷ் குமாரின் அபாரமான அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
48 ரன்களை தடவித் தடவி எடுத்த சாமுவேல்சை புவனேஷ் ‘வொர்க்-அவுட்’ செய்தார். 4 அவுட் ஸ்விங்கர்கள் பிறகு வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு இன்ஸ்விங்கர், சாமுவேல்ஸுக்கு திடீரென ஒன்றும் புரியவில்லை, மட்டையில் பட்டு பவுல்டு ஆனது.
ஜமைக்காவில் இந்திய வெற்றியைப் பறித்த ராஸ்டன் சேஸுக்கு ஜடேஜா அருமையாக வீசினார், பொதுவாகவே ஜடேஜா நன்றாக வீசினார், என்ன அமித் மிஸ்ரா ரன் கொடுத்தாலும் விக்கெட்டைக் கைப்பற்றுவார், ஜடேஜா டைட்டாக வைத்திருந்தார், ஆனால் இம்முறை அவர் ராஸ்டன் சேஸை வீழ்த்தினார்.
புவனேஷ் குமார் தனது ஸ்விங் பந்து வீச்சின் அதீதத்தை மறு முனையில் காட்டிக் கொண்டிருந்தார். ஜேசன் ஹோல்டருக்கு இன்ஸ்விங்கர் 2 ரன்களில் எல்.பி. ஆக, அல்சாரி ஜோசப் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மீண்டும் விக்கெட் கீப்பர் டவ்ரிச் சோதனைகளை மீறி 18 ரன்களுக்காக நின்றார், 9 ஓவர்களை தொடர்ச்சியாக வீசிய புவனேஷ் குமார் களைப்படைந்த நிலையிலும் டவ்ரிச்சிற்கு எட்ஜ் எடுக்க வைத்தார், ஆனால் கேட்சை ராகுல் விட்டது 3-வது நடுவரால் உறுதி செய்யப்பட்டது. மீண்டும் புவனேஷ் பந்தில் டவ்ரிச் புல் செய்ய அது மிட்விக்கெட்டில் ரோஹித் கோட்டை விட்ட கேட்ச் ஆனது, ஆனால் சூரியன் மறைத்தது என்று சைகை செய்தார் ரோஹித்.
இந்நிலையில் கமின்ஸுக்கு புவனேஷ் பந்தில் நேராக வாங்கிய எல்.பி.யை நடுவர் மறுத்தார், விராட் கோலி, புவனேஷ் குமார் வெறுப்படைந்தனர். கடைசியில் அஸ்வினைக் கொண்டு வந்து கமின்ஸை வீழ்த்த புவனேஷ் குமார் டவ்ரிச்சின் எட்ஜை மீண்டும் பிடிக்க இம்முறை ஷிகர் தவண் தடுமாறித்தடுமாறிக் கேட்ச் பிடித்தார். புவனேஷ் தனது இந்த ஸ்பெல்லில் 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார், மொத்தமாக 23.4 ஓவர்களில் 10 மெய்டன்களுடன் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிகவும் அருமையான பந்து வீச்சு, ஆட்டத்தின் போக்கை மாற்றும் பந்துவீச்சு, கபில்தேவுக்குப் பிறகு அருமையான ஸ்விங் பந்து வீச்சைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.
இந்தியா களமிறங்கி ராகுலின் 24 பந்து 28 ரன்களினால் ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் சென்று கொண்டிருந்த்து, ஷிகர் தவண் 48 பந்துகளில் பவுண்ட்கரிகளே இல்லாமல் ஒரு செல்ஃபிஷ் 26 ரன்களை எடுத்து சேஸின் ரவுண்ட் த விக்கெட் யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி. ஆனார்.
முன்னதாக கோலி கமின்ஸ் பந்தை தவறான லைனில் ஆடி 4 ரன்களில் எல்.பி.ஆனார். இதனையடுத்து ரோஹித் சர்மா, ரஹானே சற்றே எச்சரிக்கையுடன் ஆட நேரிட்டது. அதன் பிறகு ரோஹித் சர்மா 3 சிக்சர்களுடன் 57 பந்துகளில் 41 ரன்களுடனும், ரஹானே 93 பந்துகளில் 51 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ரோஹித் அடித்த 3 சிக்சர்களில் ஜோசப்பை லாங் ஆஃபில் அடித்த சிக்சர் அபாரம், கோலி பெவிலியனில் எழுந்து நின்று கைத்தட்டினார். முன்னதாக பிராத்வெய்ட்டை லாங் ஆனிலும், சேஸை லாங் ஆனிலும் சிக்ஸ் அடித்தார், இதில் சேசை அடித்த முதல் சிக்ஸ் ஷாட்டை ஜோசப் சரியாகக் கணித்திருந்தால் ஒருவேளை கேட்ச் ஆகியிருக்கலாம்.
இன்று 5-ம் நாள், காலையில் ஒரு டி20 இன்னிங்ஸை காட்டி விட்டு 285 ரன்கள் முன்னிலையை 325 ரன்கள் வரை கொண்டு சென்று கோலி டிக்ளேர் செய்து மே.இ.தீவுகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT