Published : 13 Jun 2016 06:55 PM
Last Updated : 13 Jun 2016 06:55 PM

2 போட்டிகளுக்கிடையே வித்தியாசம் காணும் தோனி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளிலும் சவால்கள் இன்றி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த இரு போட்டிகளுக்கும் இடையே வித்தியாசம் காண்கிறார் கேப்டன் தோனி.

ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:

கேட்ச்களைப் பிடிப்பது எப்பவுமே சிறந்தது. குறிப்பாக மட்டையின் உள்விளிம்பில் பட்டு வரும் கேட்ச்களை பிடிப்பது மேலும் சிறந்தது. முதல் ஆட்டத்தை விட இந்த ஆட்டம் வித்தியாசமானது. சற்றே வேறு விதமான பிட்ச். முதல் 10 ஓவர்களில் விளையாடப்பட்ட ஷாட்களை வைத்துப் பார்க்கும் போது பந்துகள் ஸ்ட்ரோக் ஆட ஏதுவாக மட்டைக்கு வந்ததாகவே தெரிகிறது.

பவுலர்கள் ஜிம்பாப்வே அணியை குறைந்த ஸ்கோருக்கு மட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் 200 ரன்களைக் கடந்து விடுவார்கள் என்றே நான் நினைத்தேன். ஸ்பின்னர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அனைத்தையும் விட முக்கியமானது போட்டிகளை வெல்வது, அதே போல் பேட்டிங்கில் தொழில்நேர்த்தியான ஆட்டம் வெளிப்படுவதும் நல்ல அறிகுறி. முதல் போட்டியிலும் கூட பேட்டிங் தொழில் நேர்த்தியாக அமைந்தது.

அடுத்த போட்டிக்கான வீரர்களை சஞ்சய் பாங்கருடன் அமர்ந்து முடிவு செய்வோம், பெஞ்சில் நிறைய வீரர்கள் ஆனால் இருப்பதோ ஒரேயொரு போட்டி. டி20 அணிக்கு பொருத்தமான வீரர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு பவுலருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பிருக்கிறது, என்றார் தோனி.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்பின்னர் சாஹல் கூறும்போது, “பந்து வீச்சை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். பிட்ச் கொஞ்சம் மந்தமாக செயல்பட்டது. முதல் போட்டியில் பேட்ஸ்மென்கள் எனது பந்து வீச்சை அடிக்க முயலவில்லை, தற்காப்பு உத்தியைக் கடைபிடித்தனர். இன்று என் பந்தை அடிக்க முற்பட்டனர். இதனால் விக்கெட்டுகள் கிடைத்தது.

விக்கெட் டு விக்கெட் பந்து வீச முயற்சி செய்தேன், காற்றில் மெதுவாக வீசுமாறு தோனியும் ஆலோசனை வழங்கினார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x