Published : 30 Jul 2016 09:11 PM
Last Updated : 30 Jul 2016 09:11 PM
கிங்ஸ்டன் ஜமைக்காவில் தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் மே.இ.தீவுகள் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நல்ல ஈரப்பதம் உள்ள பிட்சில் பவுலிங் செய்வதற்குப் பதிலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் ஜேசன் ஹோல்டர்.
இசாந்த் சர்மா பந்துகளை எழுப்புவதோடு, உள்புறமாக நன்றாக் ஸ்விங் செய்து வருகிறார். இந்நிலையில் ஆட்டத்தின் 3-வது ஓவரில் பிராத்வெய்ட், டேரன் பிராவோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார் இசாந்த் சர்மா. ஹாட்ரிக் பந்தை எதிர்கொண்ட மர்லன் சாமுவேல்ஸுக்கு ஒரு அருமையான இன்ஸ்விங் பந்து தொடைப்பகுதியில் வாங்கினார்.
பிராத்வெய்ட்டுக்கு அருமையான எகிறு பந்து ஒன்றை நெஞ்சுயரத்திற்கு எழுப்பினார் இசாந்த் சர்மா, அவர் அதனை விட்டுவிடும் உத்தியை கடைபிடிக்க முடியாதவாறு விரைவாக வந்தது மட்டையை உயர்த்தினார் பந்து மட்டையில் பட்டு ஷார்ட் லெக்கில் புஜாராவிடம் எளிதான கேட்ச் ஆக அமைந்தது.
மே.இ.தீவுகளின் சிறந்த பேட்ஸ்மென் டேரன் பிராவோ இறங்கினார், ரவுண்ட் த விக்கெட்டில் இசாந்த் சர்மா பந்தை உள்ளே செல்லும் கோணத்தில் வீசினார், குட் லெந்த் பந்து இதனை கணித்து ஆடாமல் விடுபவர் பெரிய பேட்ஸ்மெனாகவே இருக்க முடியும், ஆனால் பிராவோ வந்து நின்றவுடன் இப்படிப்பட்ட பிட்சில் ஒரு பந்து வந்தது என்றால் என்ன செய்ய முடியும், தொட்டார், எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் விராட் கோலியிடம் கேட்ச் ஆனது, வலது புறம் சாய்ந்து அருமையாகப் பிடித்தார்.
மொகமது ஷமி ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து வெளியே எடுக்க, சற்றே பவுன்ஸ் அதிகமாக இருந்த பந்தை சந்திரிகா ஆடியிருக்க வேண்டியதில்லை ஆனால் அவரை ஆடத்தூண்டியது அந்தப் பந்து, பளார் என்று அடிக்காமல் மட்டையை பந்தருகே கொண்டு சென்று தொங்கவிட்டார், ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் ஆனது.
இசாந்த் சர்மா 3 ஒவர்கள் 4 ரன்கள் 2 விக்கெட். ஷமி 2 ஓவர்களில் 3 ரன்கள் ஒரு விக்கெட். தற்போது சாமுவேல்ஸ், பிளாக்வுட் இருவருமே ரன் எடுக்காமல் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT