Published : 20 Feb 2017 01:27 PM
Last Updated : 20 Feb 2017 01:27 PM
சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தற்போதைய தமிழக அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (முழுப்பெயர் தங்கராசு நடராஜன்) இவரை ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் தற்போதைய ஏலத்தில் ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளது.
தமிழக அணி 2011-12-ல் ரஞ்சி சாம்பியன் ஆன போது சின்னப்பம்பட்டியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் உள்ளூர் நட்சத்திரமாக திகழ்ந்தவர் டி.நடராஜன்.
தோல் பந்தில் வீசுவது பற்றி அவர் அப்போதெல்லாம் அறிந்திருக்கவில்லை. இங்கிருந்துதான் சென்னை வந்த டி.நடராஜன், தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்கு ஆடினார். தமிழ்நாடு முதல் டிவிஷன் லீக் என்பது சாதாரண விஷயமல்ல, மிகுந்த சவால் அளிக்கக் கூடியது.
இந்நிலையில் இரண்டே ஆண்டுகளில் நடராஜனின் திறமை அடையாளம் காணப்பட்டு முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவரது பந்துவீச்சு த்ரோ என்பதாக சந்தேகம் எழ இவர் பந்து வீச்சு ஆக்சனை மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். முன்னாள் தமிழ்நாடு இடது கை பவுலர் சுனில் சுப்ரமணியத்தின் வழிகாட்டுதலில் நடராஜன் தனது ஆக்சனை சரி செய்து கொண்டார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20-யில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய பவுலர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு மெருகேற்றினார்.
தற்போது ரஞ்சியிலிருந்து இன்னொரு படி முன்னேறி ஐபிஎல் 2017-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக இவர் ஆடுகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் கிங்ஸ் லெவன் அணி இவரது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT