Published : 02 Aug 2016 10:25 AM
Last Updated : 02 Aug 2016 10:25 AM
ஜமைக்கா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டும், ரஹானேயின் சதத்துடனும், இந்திய அணியின் டிக்ளேருடனும் முடிந்தது.
இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்து இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ரஹானே தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்து 108 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதில் அவர் 13 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் விளாசினார். விருத்திமான் சஹா 47 ரன்கள் எடுத்தார்.
சஹா, ரஹானே இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 98 ரன்களைச் சேர்த்தனர். அமித் மிஸ்ரா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் பங்களிப்பு செய்தார்; உமேஷ் யாதவ் 4 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். உதிரிகள் வகையில் 27 ரன்கள் கூடுதல் சாதகமாக அமைந்தது.
மே.இ.தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக உழைத்தாலும் கேப்டன்சி அவர்களுக்கு பக்கபலமாக இல்லை, ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டரை முதலில் கேப்டன்சியிலிருந்து தூக்கி விட்டு நல்ல உத்வேகமான, ஆக்ரோஷமான ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும்.
டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரசல், கிறிஸ் கெய்ல், பொலார்ட், சுனில் நரைன் ஆகியோரை அணியில் கொண்டு வர வேண்டும். இந்த அணிக்கு வெளியேதான் நல்ல அணி உள்ளது. ஏனெனில் ஹோல்டர் போன்ற செயலற்ற கேப்டனின் கீழ் நல்ல வீரர்களின் எதிர்காலமும் பாழாகிவிடும்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண், விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர், இங்கு, ராகுல், ரஹானே. உணவு இடைவேளைக்கு பிறகு 10 ஓவர்கள் வீசியதும் மழை வந்தது. 50 நிமிடங்களை அது பறித்துக் கொண்டது.
மே.இ.தீவுகள் அணி இந்திய டிக்ளேர் முடிவை தாமதப்படுத்தியதில் வெற்றி பெற்றது, இதைத்தானே ஹோல்டர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து செய்து வருகிறார்! 46.1 ஓவர்களில் 142 ரன்களையே எடுக்க முடிந்தது. 304 ரன்கள் என்ற ஓரளவுக்கு நல்ல முன்னிலையைப் பெற காலதாமதத்தை ஏற்படுத்தியது மே.இ.தீவுகள் பந்து வீச்சு.
170-வது ஓவரில் ரஹானே எட்ஜில் தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். அமித் மிஸ்ரா, சேஸ் வீசிய ஒரு பந்தில் அது பிட்ச் ஆகும் இடத்துக்கு காலை கொண்டு செல்ல முடியாமல் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மொகமது ஷமி அடுத்த பந்தே பந்து வரும் திசையை தவறாகக் கணித்து பவுல்டு ஆனார். உமேஷ் யாதவ் டாப் எட்ஜில் சேஸ் பந்தில் அவுட் ஆக சேஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியை வழி நடத்தினார்.
இன்றும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. மே.இ.தீவுகள் 304 ரன்கள் முன்னிலையை இன்னிங்ஸ் தோல்வியில்லாமல் செய்தாலே பெரிய விஷயம் என்றுதான் தெரிகிறது.
ஆட்டம் மழையால் பாதிக்கப்படாமல் நடைபெற்றால் நிச்சயம் விராட் கோலி வெற்றி பெறாமல் விடமாட்டார். மே.இ.தீவுகளின் ஒரே நம்பிக்கை மழைதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT