Published : 22 Jun 2016 04:28 PM
Last Updated : 22 Jun 2016 04:28 PM
மே.இ.தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மே.இ.தீவுகள் அணியை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும் மே.இ.தீவுகள் 8 புள்ளிகளுடனும் மற்றொரு ஆட்டத்தில் மோத வேண்டியுள்ளது. இதில் மே.இ.தீவுகள் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும் அல்லது சாதாரண வெற்றி பெற்றால் ரன் விகிதம் அடிப்படையில் இறுதிக்குள் நுழைய வேண்டும். எனவே மே.இ.தீவுகள் தங்களது கடைசி லீக் போட்டியில் அசாதாரணமாக விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி சார்லஸ், பிளெட்சர், டேரன் பிராவோ ஆகியோரை சொற்ப ரன்களுக்கு ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரிடம் இழக்க 8.1 ஓவர்களில் 31/3 என்று தடுமாறியது. அதன் பிறகு மர்லன் சாமுவேல்ஸ் (125), தினேஷ் ராம்தின் (91) ஆகியோரது 34 ஓவர் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப்பினால் 50 ஓவர்களில் 282/8 என்ற நிலைக்கு உயர்ந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஸ்மித், மிட்செல் மார்ஷ் அரைசதங்களுடன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி பினிஷிங்குடன் 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.
தொடக்கத்தில் பிட்சின் உதவியுடன் மிட்செல் ஸ்டார்க் நல்ல வேகத்துடன் பந்துகளை உயரம் எழுப்பி சார்லஸ், பிளெட்ச்சருக்கு அதிக தொல்லைகள் கொடுத்தார். கடுமையான ஸ்லெட்ஜிங்குக்குப் பிறகு அவர் சொற்ப ரன்களில் சார்லஸ், பிளெட்சர் ஆகியோரை வீழ்த்தினார். இரண்டுமே அருமையான பந்து. ஹேசில்வுட்டுக்கும் பந்து எழும்பியது, அப்படிப்பட்ட பந்தில்தான் டேரன் பிராவோ 15 ரன்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித்தின் அருமையான கேட்ச் ஆகும் இது.
அதன் பிறகு சாமுவேல்ஸ், ராம்தின் இணைந்தனர், நிதானமாக ஆடியதால் பவுண்டரி வரவேயில்லை, 7 ஓவர்கள் பவுண்டரி வறட்சிக்குப் பிறகு 20-வது ஓவரில் 64/3 என்ற நிலையில் போலண்ட், மார்ஷை சாமுவேல்ஸ் கவனித்தார். 2 ஓவர்களில் 27 ரன்கள் வந்தது.
பிட்ச் கொஞ்சம் மெதுவாக ஸ்மித் ஸ்பின்னரை நம்பாததால் சாமுவேல்ஸ் ஆட்டம் சூடு பிடித்தது. ஆனால் 65 ரன்களில் மேத்யூ வேட், சாமுவேல்ஸுக்கு கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். முன்னதாக 8 பவுண்டரி 1 சிக்சருடன் சாமுவேல்ஸ் தனது அரைசதத்தை எடுத்தார். பின்ச், மேக்ஸ்வெல் 5 ஓவர்கள் வீசி 26 ரன்களை கொடுத்தனர், ஆனால் விக்கெட் விழவில்லை. சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின் நன்றாக செட்டில் ஆயினர். ராம்தின் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 69 பந்துகளில் அரைசதம் கண்டார். சாமுவேல்ஸ் பிறகு 123 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் எடுத்தார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சதமாகும் இது. 40.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டிய மே.இ.தீவுகள் 46.4 ஓவர்களில் 250 ரன்களை எட்டியது, ராம்தின் 92 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 91 எடுத்து ஸ்டார்கிடம் பவுல்டு ஆனார். 50வது ஓவரின் கடைசி பந்தில் சாமுவேல்ஸ் 125 ரன்களில் ஆட்டமிழந்தார், மே.இ.தீவுகள் 282 ரன்கள் எடுத்தது.
உஸ்மான் கவாஜா, பிஞ்ச் மூலம் 27 பந்துகளில் 35 ரன்கள் தொடக்கம் கண்ட ஆஸ்திரேலியா இருவரையும் அடுத்தடுத்து இழந்தது. ஸ்மித், பெய்லி இணைந்து 13 ஓவர்களில் 64 ரன்களைச் சேர்த்தனர், பெய்லி 34 ரன்களில் பென்னிடம் அவுட் ஆனார்.
பிறகு ஸ்மித், மிட்செல் மார்ஷ் இணைந்தனர் இருவரும் ஸ்கோரை 42-வது ஓவரில் 221 ரன்களுக்கு உயர்த்தினர், ஸ்மித் 78 ரன்களில் ரன் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் சுனில் நரைனை ரிவர்ஸ் ஸ்வீப் சிக்சுடன் அதிரடி காண்பித்து 26 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மிட்செல் மார்ஷ் 79 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார். 48.4 ஓவர்களில் 283/4 என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஆட்ட நாயகனாக சாமுவேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT